2012-03-29 15:57:10

திருத்தந்தை ஆற்றும் திருப்பலியில் திரட்டப்படும் காணிக்கைத் தொகையானது சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தொருக்கென அனுப்பப்படும்


மார்ச்,29,2012. சிரியா நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ள மக்கள் மீது திருத்தந்தை காட்டும் அன்பும், அவர்களுக்கு உதவி செய்வதற்கு Cor Unum என்ற பாப்பிறைக் கழகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளும் போற்றுதற்குரியன என்று தமாஸ்கு நகரின் Maronite ரீதி பேராயர் சமீர் நாசர் கூறினார்.
ஒவ்வொரு புனித வாரத்தின் வியாழன்று மாலைத் திருப்பலியைத் திருத்தந்தை, உரோம் நகரில் உள்ள புனித யோவான் லாத்தரன் பசிலிக்காவில் நிறைவேற்றுவது வழக்கம். இவ்வாண்டு அவர் அங்கு ஆற்றும் திருப்பலியில் திரட்டப்படும் காணிக்கைத் தொகையானது சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தொருக்கென அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Cor Unum என்ற பாப்பிறைக் கழகம், இத்தொகையை சிரியாவில் உள்ள காரித்தாஸ் அமைப்பிற்கு அனுப்பி வைக்கும்.
திருத்தந்தையும், பாப்பிறைக் கழகமும் மேற்கொண்டுள்ள இந்த அன்பு முயற்சிக்குத் தன் நன்றியை கூறிய பேராயர் நாசர், துன்பத்தில் இருக்கும் விசுவாசிகளுடன் திருஅவை எப்போதும் இணைந்துள்ளது என்பதற்கு இந்த செயல்பாடு ஓர் அடையாளம் என்று கூறினார்.
சிரியாவில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் வன்முறைகளில் இருந்து இதுவரை 20,000க்கும் அதிகமானோர் தப்பித்து, லெபனான், இன்னும் மற்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர் என்று Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
உடலாலும், உள்ளத்தாலும் தளர்ந்துள்ள புலம்பெயர்ந்தோர் மீது திருத்தந்தை காட்டும் இந்த அக்கறை, அவர்களுக்குப் பெரும் பக்கபலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று லெபனான் காரித்தாஸ் அமைப்பின் தலைவரான அருள்தந்தை Simon Faddoul கூறினார்.








All the contents on this site are copyrighted ©.