2012-03-29 16:38:11

திருத்தந்தை - கியூபாவுக்கு வெளியிலிருந்து அந்நாடு மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் அந்நாட்டினர் மீது நியாயமற்ற பளுவைச் சுமத்துகின்றன


மார்ச்29,2012. எல் கோப்ரே பிறரன்பு அன்னை 4 நூற்றாண்டளவாக இந்த கியூபா மக்களை வழிநடத்தி வந்ததற்கு நன்றி கூற, பிறரன்பின் திருப்பயணியாக இங்கு வந்தேன். உங்கள் நாட்டின் மூத்தவர்களின் விசுவாசத்தை மீண்டும் எண்ணிப் பார்த்து, நல்ல வருங்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு அந்த விசுவாசத்திலிருந்து வலிமையைப் பெறுங்கள். மிக உயரிய விழுமியங்களை கியூபா மண்ணில் மலரச் செய்ய அனுமதிப்பதன் மூலம், விரிவான கண்ணோட்டத்தில், புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஒப்புரவு நிறைந்த சமூகத்தை சமைக்க முடியும். ஆண்டவரின் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டு, நற்செய்திக்குத் திறந்த மனம் கொண்டவர்களாய் இருங்கள். அதன்மூலம் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையைப் புதுப்பிக்க முடியும். கியூபா, ஒருபக்க சார்பான மற்றும் அசைக்க முடியாத கண்ணோட்டங்களை விட்டுத்தள்ள வேண்டும். ஏனெனில் இவை புரிந்து கொள்ளுதலையும் சாரமுள்ள ஒத்துழைப்பு முயற்சிகளையும் கடினமானதாக்கும். அடிப்படை சுதந்திரங்களை மதிப்பது, மனித மாண்பின் அடிப்படை தேவைகளுக்குப் பதில் சொல்லவும், சமுதாயத்தைக் கட்டி எழுப்பவும் உதவும். கியூபாவுக்கு வெளியிலிருந்து அந்நாடு மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் அம்மக்கள் மீது நியாயமற்ற பளுவைச் சுமத்துகின்றன. பொருளாதாரத் தேவைகளின் பிரச்சனைகளை மேலும் மோசமாக்குகின்றன. கியூபா, கிறிஸ்துவில் மேற்கொள்ளும் உண்மையான முன்னேற்றப் பாதையில் வளர்ச்சி காண இந்நாட்டிற்காகத் தொடர்ந்து செபிக்கின்றேன். கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அவர் இருக்குமிடத்தில் நம்பிக்கை இருக்கும். நிச்சயமற்றதன்மைகளை நன்மைத்தனம் மேற்கொள்ளும் எதிர்பாராத வாய்ப்புக்களைத் தரும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை








All the contents on this site are copyrighted ©.