2012-03-28 15:57:33

திருப்பீடப் பிரதிநிதிகளுக்கு வியட்நாம் அரசு அனுமதி மறுப்பு


மார்ச்,28,2012. வியட்நாமைச் சேர்ந்த காலம் சென்ற முன்னாள் கர்தினால் Francis Xavier Nguyen Văn Thuận அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்நாட்டிற்கு செல்லவிருந்த திருப்பீடப் பிரதிநிதிகளுக்கு வியட்நாம் அரசு அனுமதி மறுத்துள்ளது.
கர்தினால் Văn Thuận அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் அண்மையில் துவக்கப்பட்டன. இது தொடர்பாக, திருப்பீடத்தின் சார்பில் கர்தினால் Peter Turkson தலைமையில் மார்ச் மாதம் 23 முதல் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி வரை அந்நாட்டில் தகவல்கள் திரட்டச் செல்லவிருந்த பிரதிநிதிகள் குழுவிற்கு வியட்நாம் அரசு கடவு சீட்டு தருவதற்கு அனுமதி மறுத்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை மதச் சுதந்திரத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட அத்துமீறிய ஒரு முடிவு என்று வியட்நாம் கத்தோலிக்கர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஒரு சில நாட்களில் அங்கு ஆரம்பிக்கப்பட்ட கம்யூனிச இராணுவ அடக்குமுறையால் சிறைப்படுத்தப்பட்டு அடுத்த 13 ஆண்டுகள் எவ்வித விசாரணையும் இன்றி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கர்தினால் Văn Thuận, நம்பிக்கையைத் தன் ஆயர் பணியின் விருதுவாக்காகக் கொண்டிருந்ததால், அரசு உருவாக்கியுள்ள இந்தத் தடையும் நீங்கி, திருப்பீட அதிகாரிகளின் வருகை விரைவில் நடைபெறும் என்று தலத் திருஅவை நம்பிக்கை தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.