2012-03-28 16:05:55

கியூபா அரசுத்தலைவருடன் திருத்தந்தையின் சந்திப்பு


மார்ச்28,2012. Santiago de Cuba விமான நிலையத்திலிருந்து ஒரு மணி முப்பது நிமிடங்கள் பயணம் செய்து ஹவானா “Jose Marti” பன்னாட்டு விமான நிலையத்தை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அடைந்த போது உள்ளூர் நேரம் பகல் 12 மணி. இந்திய நேரம் செவ்வாய் இரவு 10 மணி 30 நிமிடங்கள். அந்நகர் திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவு அருந்தினார். மாலை 5.15 மணிக்கு ஹவானா பரட்சி அரண்மனை சென்று அரசுத்தலைவர் ரால் காஸ்ட்ரோவைச் சந்தித்தார் திருத்தந்தை. 40 நிமிடங்களுக்கு மேலாக இவ்விருவரும் தனியே பேசினர். அரசுத்தலைவர் ரால் காஸ்ட்ரோ, திருத்தந்தைக்கு ஓர் அழகான மரத்தாலான கோப்ரே பிறரன்பு அன்னைமரியா திருவுருவத்தைக் கொடுத்தார். 1400ம் ஆண்டிலிருந்து 1530ம் ஆண்டு வரையிலான, வத்திக்கான் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட உலக வரைப்படத்தை திருத்தந்தை ரால் காஸ்ட்ரோவுக்குக் கொடுத்தார். மிகவும் இனிதாக நடந்த இச்சந்திப்புடன் இச்செவ்வாய் தின பயண நிகழ்ச்சிகள் முற்றுப் பெற்றன.
1514ம் ஆண்டில் தியெகோ வேலாஸ்கெஸ் என்பவரால் ஹவாநா நகரம் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து இஸ்பெயினுக்கு வெள்ளிக் கனிமத்தை எடுத்துச் செல்வதற்கு இந்நகர் முக்கியமான துறைமுகமாக பயன்பட்டது. கரீபியன் நகரங்களில் மிகப் பெரிதான ஹவானா, 1607ம் ஆண்டிலிருந்து தலைநகராக இருந்து வருகிறது. இந்நகரிலுள்ள புரட்சி வளாகத்தில் மிகப் பெரிய சிமெண்ட் தூண் உள்ளது. இங்கிருக்கின்ற அரசுத்தலைவர் மாளிகையும் சோவியத் கலைவண்ணத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் திருமண முறிவுகள் ஏறக்குறைய மூன்று மடங்காகிவிட்டன. இந்நாட்டில் திருமண வாழ்வில் உறுதியாய் இருக்குமாறும் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.
கியூபாவில் மூன்று நாட்கள் திருப்பயணத்தை முடித்து இவ்வியாழன் காலை 10.15 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்துடன் இந்த 23 வது வெளிநாட்டுத் திருப்பயணம் நிறைவுக்கு வரும்.







All the contents on this site are copyrighted ©.