2012-03-28 15:49:31

கவிதைக் கனவுகள்...பிரச்சனைகள்


மாலைப் பொழுது மஞ்சள் வெயில் நேரம்
கடற்கரை மணலில் குழம்பிய மனது
ஒன்றா இரண்டா அன்றையப் பிரச்சனைகள்
வந்து கொண்டே இருந்தன
கையோடு சேர்ந்து மனதும்
மண்ணைக் கிளறிக் கொண்டிருக்க
மஞ்சள் வெயிலும் மறைந்து
இருள் நிரப்பியது இருந்த இடத்தை
கலக்கத்தில் பயம் பற்றிக் கொள்ள
ஐயோ, பிரச்சனை பிரச்சனை....
கடவுளே! கைவிட்டு விட்டாயா?...
பதறத் தொடங்கிய வேளை
கேட்டது ஒரு குரல்.....
உடனடித் தீர்வு என்னிடம் இல்லை
உன் பிரச்சனைகளைத் தீர்க்க, ஆனால்
உன் பிரச்சனைகள்வழி நீ வளர
உதவ முடியும் என்னால் நிச்சயமாக.
புரிந்து கொள் ஒவ்வொரு பிரச்சனையும்
நீ வளர்வதற்கான வாய்ப்பு.
மீண்டும் சொன்னது அக்குரல்...
பிரச்சனைகளைப் பிரச்சனைகளாக நீ பார்த்தால்
அவை என்றும் உனக்குப் பிரச்சனைகளே, ஆனால்
நீ அவற்றை வாய்ப்புக்களாகப் பார்த்தால்
நீ வளர்வாய்.
உயரிய உள்ளத்துக்கு உவகை தருவது வெற்றியல்ல
போராட்டமே, புரிந்து கொள்.








All the contents on this site are copyrighted ©.