இலங்கை அமைச்சரின் கூற்றுகள் ஆதாரமற்றவை, அர்த்தமற்றவை - காரித்தாஸ்
அதிகாரிகள்
மார்ச்,28,2012. இலங்கையில் பணிபுரியும் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, அந்நாட்டில் குழப்பத்தை
உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியிருப்பதைத்
தலத் திருஅவை வன்மையாகக் கண்டித்துள்ளது. அண்மையில் இலங்கையில் விவசாயிகள் மேற்கொண்ட
ஒரு போராட்டத்தை நடத்த காரித்தாஸ் வாகனங்களையும், உணவையும் ஏற்பாடு செய்திருந்ததென்று
இலங்கையின் நலத்துறை அமைச்சர் Maithripala Sirisena கூறினார். மேலும், காரித்தாஸ் உறுப்பினர்கள்
ஜெனீவா சென்று இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினர் என்றும் இவ்வமைச்சர் கூறினார். அமைச்சரின்
இந்தக் கூற்றுகள் அப்பட்டமான பொய் என்று இலங்கை ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப்
பணிக்குழுவின் தலைவரான ஆயர் Harold Anthony Perera எடுத்துரைத்தார். அமைச்சரின் இந்தக்
கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, அர்த்தமற்றவை என்று காரித்தாஸ் அதிகாரிகளும் கூறியுள்ளனர். விவசாயிகள்
மற்றும் மீன்பிடித் தொழிலாளிகளை ஒருங்கிணைக்கும் ஒரு தேசிய அமைப்பு இந்த போராட்டத்தை
நடத்தியது என்றும், தங்கள் அடிப்படை உரிமைகளுக்குப் போராடும் உரிமை தங்களுக்கு உள்ளது
என்றும் இவ்வமைப்பின் பிரதிநிதி Nihal Winadhipathi கூறினார்.