2012-03-27 14:55:17

உலக இளையோர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி


மார்ச்,27,2012. கிறிஸ்தவ அனுபவத்தின் இதயமாக மகிழ்வே இருப்பதால் 'ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்' என்பது இவ்வாண்டு இளையோர் தினக்கொண்டாட்டங்களுக்கு தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாளுக்கான தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வரும் வாரத்துவக்கத்தில் குருத்து ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக இளையோர் தினத்திற்கென இச்செவ்வாயன்று செய்தி வெளியிட்ட திருத்தந்தை, துன்பமும் பதட்ட நிலைகளும் நிரம்பியுள்ள இவ்வுலகில் கிறிஸ்தவ விசுவாசத்தின் நம்பகத்தன்மை மற்றும் அழகின் முக்கிய சாட்சியம் மகிழ்வே என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இயேசு பிறந்தபோது வானதூதர்கள் வழி இடையர்களுக்கு அறிவிக்கப்பட்ட உண்மையான, நீடித்த மகிழ்வை இவ்வுலகின் மக்களுக்கு எடுத்துச் செல்வதே கிறிஸ்தவர்கள் பெற்றிருக்கும் அழைப்பு எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
நம் ஒவ்வொருவர் இதயமும் மகிழ்வால் உருவாக்கப்பட்டுள்ளது, அந்த இதயத்திற்குள் மகிழ்விற்கான ஏக்கம் இருந்து கோண்டேயிருக்கிறது, அது முழுமையான, நீடித்த மகிழ்வு மட்டுமல்ல, நம் இவ்வுலக இருப்புக்கு மேலும் சுவை சேர்க்கக் கூடியது எனக்கூறும் திருத்தந்தையின் செய்தி, உண்மையான மகிழ்வின் ஆதாரம் கடவுளே என்பதையும் உதாரணங்களுடன் விளக்குகிறது.
கிறிஸ்தவ மகிழ்வை நம் இதயங்களில் தக்கவைத்தல், அன்பினால் பெறப்படும் மகிழ்வு, மனமாற்றத்திலிருந்து பிறக்கும் மகிழ்வு, துன்ப காலத்தில் விசுவாச பலத்திலிருந்து பெறப்படும் மகிழ்வு, மகிழ்வின் சாட்சியங்களாகச் செயல்படுதல் போன்ற தலைப்புகளையும் ஆராய்ந்து, இவ்வாண்டின் உலக இளையோர் தினத்திற்கான தன் செய்தியை வழங்கியுள்ளார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.