2012-03-27 16:18:20

உண்மையான முன்னேற்றம் என்பது, மனிதரின் ஆன்மீக, சமயக் கூறுகள் மற்றும் ஒழுக்கநெறியில் கவனம் செலுத்துவதில் அடங்கியுள்ளது - திருத்தந்தை


மார்ச்27,2012. விசுவாசத்திலும், நம் வாழ்க்கையில் கடவுளின் அன்புப் பிரசன்னத்திலிருந்து பிறக்கும் நம்பிக்கையிலும் எனது சகோதர சகோதரிகளை உறுதிப்படுத்தவும், பிறரன்பின் திருப்பயணியாக கியூபாவுக்கு வந்துள்ளேன். 1998ம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் கியூபாவுக்கு மேற்கொண்ட திருப்பயணம், கியூப மக்கள் அனைவரின் ஆன்மாக்களில் துடைத்தழிக்க முடியாத முத்திரையை பதித்துள்ளது. சுத்தமான சூழலில் வீசும் மெல்லிய தென்றல் போல, கியூபத் திருஅவைக்குப் புதிய சக்தியை அளித்துள்ளது. அத்திருப்பயணம், ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையின் புதிய உணர்வில், கியூபாவில், திருஅவைக்கும் நாட்டுக்கும் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. எனினும், இன்னும் பல துறைகளில் அதிக முன்னேற்றம் கொண்டு வரப்படலாம், கொண்டுவர முடியும். குறிப்பாக, சமுதாய வாழ்வில் மதத்தின் பங்கைப் பொறுத்த வரையில் மேலும் முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. இளையோர் முதியோர், விடலைப் பருவத்தினர், சிறார், நோயாளிகள் தொழிலாளர்கள், கைதிகள், குடும்பங்கள், ஏழைகள், தேவையில் இருப்போர் என கியூப மக்களின் துன்பங்களையும் மகிழ்வையும், மேன்மையான ஏக்கங்களையும் ஆவல்களையும் எனது இதயத்தில் தாங்கிச் செல்கிறேன். இன்று உலகின் பல பாகங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அத்துடன் ஆழமான ஆன்மீக மற்றும் அறநெறி நெருக்கடிகளும் மக்களைப் பாதித்து அவை விழுமியங்களற்ற மனித சமுதாயத்தை ஆக்கியுள்ளன. சில சக்திகளின் தன்னலமும், இலக்குகளும், குடும்பங்கள் மற்றும் தனிப்பட்டவரின் உண்மையான நலனில் சிறிதளவே அக்கறை காட்டுகின்றன. இது போன்ற கலாச்சார மற்றும் ஒழுக்கநெறிப் போக்கில் நாம் தொடர்ந்து சென்று கொண்டிருக்க முடியாது. இவை ஏற்படுத்தியிருக்கும் வேதனை நிறைந்த சூழலில் பலர் துன்புறுகின்றனர். அதேசமயம், உண்மையான முன்னேற்றம் என்பது, மனிதரிலும், குறிப்பாக அவரது ஆன்மீக, சமயக் கூறுகள் மற்றும் ஒழுக்கநெறியில் கவனம் செலுத்துவதில் அடங்கியுள்ளது. நீதி, அமைதி, சுதந்திரம் மற்றும் ஒப்புரவின் பாதையில் இந்த அன்புமிக்க நாட்டை வருங்காலத்தில் நடத்திச் செல்ல, 400வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் "El Cobre" பிறரன்பு அன்னைமரியாவின் பரிந்துரையை நான் இறைஞ்சுகிறேன் என்று உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.