2012-03-26 15:50:34

காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறார் ஐ நா. பொதுச்செயலர் பான் கி மூன்.


மார்ச்,26,2012. வயதிற்கு வந்தவர்களின் மரணங்களுக்கு இரண்டாவது காரணமாக இருக்கும் காசநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
எய்ட்ஸ் நோய்க்கு அடுத்து மக்களின் உயிர்களை அதிகமாகப் பலிவாங்கும் காச நோயின் அச்சத்திலிருந்தும் அந்நோயின் பாதிப்பிலிருந்தும் உலக மக்கள் அனவரையும் காப்பாற்ற, ஒன்றிணைந்த ஒருமைப்பாட்டுணர்வுத் தேவைப்படுவதாக அறிவித்தார் அவர்.
இம்மாதம் 24ம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சிறப்புச் செய்தி வெளியிட்ட பான்கி மூன், காச நோய் குறித்த பாராமுகத்தை விட்டொழித்து, நாம் வாழும் இக்காலத்திலேயே இந்நோயை ஒழித்துவிடும் முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும் என அதில் கேட்டுள்ளார்.
2010ம் ஆண்டில் ஏறத்தாழ 90 இலட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டதில், 14 இலட்சம் பேர் உயிரிழந்தனர். இதில் 95 விழுக்காட்டு மரணங்கள் வளரும் நாடுகளில் இடம்பெற்றுள்ளன.
காச நோய்க்கெதிரான ஒன்றிணைந்த நடவடிக்கைகளால் 1995ம் ஆண்டிலிருந்து இதுவரை 4 கோடியே 60 இலட்சம் பேர் குணம்பெற்றுள்ளனர், 70 இலட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்கிறார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.








All the contents on this site are copyrighted ©.