2012-03-26 15:51:17

இந்திய இரயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2011ல் அதிகரிப்பு


மார்ச்,26,2012. இரயில்களில் போதிய பாதுகாப்பு இல்லாததால், 2011ம் ஆண்டு, கற்பழிப்பு, கொள்ளை, பெண்களைக் கேலி செய்தல் போன்ற, 712 வழக்குகள் பதிவாகியுள்ளன என இரயில்வே அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 712 வழக்குகளுள் 15 பாலியல் வன்முறை, 362 பெண்களைக் கேலி செய்த வழக்குகளும் அடக்கம். இரயில்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துள்ளன எனக்கூறும் இரயில்வே அமைச்சக அறிக்கை, குற்றங்களைத் தடுப்பதற்காக, தற்போது, 3000க்கும் அதிகமான இரயில்களில், இரயில்வே பாதுகாப்புப் படையினர், பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறுகிறது.
இரயில்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2010ம் ஆண்டைவிட 2011ம் ஆண்டில் 211 அதிகரித்திருந்ததாகவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், 8000க்கும் அதிகமான இரயில் நிலையங்கள் உள்ள நிலையில் 202 இரயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன மற்றும் இராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய இரயில்களில் மட்டும் தான், பாதுகாப்பு வசதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.