2012-03-25 13:57:47

மெக்சிகோ திருப்பயணத்தின் முதல் நாள் நிறைவு நிகழ்ச்சிகள்


மார்ச்,25,2012. நம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மெக்சிகோ மற்றும் க்யூபா நாடுகளில் இம்மாதம் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை திருப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என்பது நாம் அறிந்ததே. தற்போது மெக்சிகோவில் உள்ள திருத்தந்தை, உள்ளூர் நேரம் சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு மெக்சிகோவின் சிறுவர், சிறுமியரைச் சந்தித்த நிகழ்வைக் குறித்து இன்று நோக்குவோம்.
மெக்சிகோ நாட்டில் தான் மேற்கொண்டுவரும் திருப்பயணம் குறித்து திருத்தந்தை அவர்களே எடுத்துரைத்ததுபோல், பற்றுறுதி, நம்பிக்கை மற்றும் அன்பின் திருப்பயணியாக அங்கு சென்றுள்ளார் திருத்தந்தை. போதைப்பொருள் தொடர்புடைய வன்முறைகளால் எண்ணற்ற அப்பாவி மக்கள் மெக்சிகோவில் உயிரிழந்து வரும் சூழலில், திருத்தந்தையின் இந்தத் திருப்பயணம், ஒழுக்கரீதிக் கொள்கைகளை வலியுறுத்துவதாக அமையும் என ஊடகங்கள் மீண்டும், மீண்டும் நம்பிக்கையை வெளியிட்டு வருகின்றன.
வரும் ஏப்ரல் மாதத்தில், தான் பாப்பிறையாக பதவியேற்றதன் 7ம் ஆண்டை நிறைவு செய்யும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இந்த 23வது வெளிநாட்டுத் திருப்பயணம், ஒரு முக்கியத்துவம் நிறைந்தது என்றே கூறவேண்டும்.
மொத்த மக்கள்தொகையில் 92 விழுக்காட்டினரைக் கத்தோலிக்கராகக் கொண்ட மெக்சிகோவில் தன் முதல் திருப்பயணத்தை மேற்கொள்கிறார் திருத்தந்தை. அதுபோல், கம்யூனிசக் கொள்கைகளின் பிடியிலிருந்தாலும், 60 விழுக்காட்டினரைக் கத்தோலிக்கராகக் கொண்ட க்யூபா நாட்டிற்கும் நம் திருத்தந்தை மேற்கொள்ளும் முதல் திருப்பயணம் இது.
மெக்சிகோவில் திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட வரவேற்பே, அந்நாட்டில் விளங்கும் கத்தோலிக்க விசுவாசத்தின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. விமான நிலைய வரவேற்ப்பின் போதும், இளையோரையும், குழந்தைகளையும் அருகேச் சென்று, தொட்டு ஆசீர்வதித்தார் நம் திருத்தந்தை. இவ்விளையோர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளும் இடம் பெற்றிருந்தனர்.
வெள்ளியன்று இரவு, மெக்சிகோவின் லெயோன் நகரிலுள்ள கப்பூச்சின் அருள் சகோதரிகள் நடத்தும் Miraflores கல்லூரிக்குச் சென்று அங்கேயே இரவு உணவு அருந்தி, நித்திரையில் ஆழ்ந்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.