2012-03-25 14:00:01

திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு


மார்ச்,25,2012. சனிக்கிழமை காலை உள்ளூர் நேரம் 8 மணிக்கு, அதாவது இந்திய நேரம் சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு, Miraflores கல்லூரியில் உள்ள சிறு கோவிலில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. பின்னர் சில திருஅவை நிர்வாக அலுவல்களைக் கவனித்துவிட்டு, மாலை நேர சந்திப்புக்களுக்காகத் தயாரித்துக் கொண்ட திருத்தந்தை, அந்தக் கப்பூச்சின் அருள் சகோதரிகளின் கல்லூரியிலேயே மதிய உணவையும் அருந்தினார்.
பின்னர், உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, அதாவது இந்திய நேரம் ஞாயிறு காலை 4.30 மணிக்கு, லெயோனில் இருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள Guanajuato நகர் நோக்கி பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை. Guanajuatoவிலுள்ள மாநில நிர்வாகத் தலைமை இல்லமான La Casa del Condo Rul எனுமிடத்தில் மெக்சிகோ அரசுத் தலைவர் Felipe de Jesus Calderon Hinojosa வைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடியத் திருத்தந்தை, அரசுத் தலைவரின் குடும்ப அங்கத்தினர்களையும் சந்தித்து, பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டார். பின்னர், அரசுத் தலைவரும் தன் அரசு அங்கத்தினர்களைத் திருத்தந்தைக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
50 வயதே நிரம்பிய இளைமையான அரசுத் தலைவரை சந்தித்தபின், திருத்தந்தை, லெயோன் பேராயருடன் இணைந்து Casa del Conde Rul மாளிகையின் மேல் முகப்பில் தோன்றி, அந்தக் கட்டிடத்தின் முன் வளாகத்தில் கூடியிருந்த சிறார்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். காலையிலிருந்தே பள்ளிக் குழந்தைகள் இந்த வளாகத்தில் திருத்தந்தையைக் காண கூடிவிட்டனர். முதன்முறையாக இத்திருத்தந்தையை நேருக்கு நேர் காணவிருக்கும் மகிழ்வு அவர்கள் முகங்களில் ஒளிர்ந்தது. "அமைதியின் வளாகம்" என்ற பெயர்கொண்ட அந்த வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் குழுமியிருக்க, அவர்களின் பாடல்களும், பேராலய மணி ஓசையும் இணைந்து ஒரு பெருநாள் உணர்வைக் கொடுத்த வண்ணம் இருந்தன.
மாடி முகப்பில் தோன்றியத் திருத்தந்தை, முதலில் இந்த ஆனந்த திருநாள் வரவேற்பிற்குத் தன் உள்ளம் நிறைந்த நன்றியை வெளியிட்டார். அதே வேளை, அந்நாட்டின் மோதல்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்தும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. அவர்களின் துன்பங்கள் குறித்து எடுத்துரைத்தார். மெக்சிகோவின் வறட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் பசி, வன்முறை, கைவிடப்படல் போன்றவைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்காகச் சிறப்பான விதத்தில் செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். சிறார்கள் வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்க உதவ வேண்டிய கடமையையும் வலியுறுத்திய பாப்பிறை, இயேசு கொணர்ந்த அமைதியின் தூதர்களாக, மெக்சிகோ நாட்டில் செயல்பட வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.
சிறார்களை சந்தித்து உரை வழங்கி, அவர்களை ஆசீர்வதித்த திருத்தந்தை, உள்ளூர் நேரம் மாலை 7 மணியளவில், அதாவது இந்திய நேரம் ஞாயிறு காலை 6.30 மணிக்கு லெயோனின் Miraflores கல்லூரி நோக்கி பயணம் மேற்கொண்டார். ஒரு மணி நேரத்தில் அக்கல்லூரியை வந்தடைந்த திருத்தந்தை, அங்கேயே இரவு உணவருந்தி நித்திரையிலாழ்ந்தார். இத்துடன், திருத்தந்தையின் மெக்சிகோ நாட்டிற்கான திருப்பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.








All the contents on this site are copyrighted ©.