2012-03-24 15:39:46

திருஅவை அரசியல் வல்லமை படைத்தது அல்ல - விமானப்பயணத்தில் திருத்தந்தை


மார்ச்24,2012. ஆல் இத்தாலியா போயிங் 777ல் மெக்சிகோவுக்குச் சென்ற திருத்தந்தை, அப்பயணத்தின் போது பன்னாட்டு ஊடகங்களின் 72 நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்ன போது திருஅவை அரசியல் வல்லமை படைத்தது அல்ல, அரசியல் கட்சியுமல்ல என்று கூறினார்.
விடுதலை இறையியல் பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த போது, “இலத்தீன் அமெரிக்காவில் தனிமனிதருக்கும் பொதுவான அறநெறிகளுக்கும் இடையே சில முரண்பாடுகள் காணக்கூடியதாய் இருக்கின்றன, இப்படிக் காணப்படுவது சிறிய அளவிலானக் கத்தோலிக்கரிடம் மட்டுமல்ல. மேலும், திருஅவை சமூகநீதிக்கு போதுமானதைச் செய்து வருகிறதா? என்பதை எப்போதும் அது கேட்க வேண்டும். திருஅவை அரசியல் வல்லமை படைத்தது அல்ல, அரசியல் கட்சியுமல்ல, ஆனால், அது அறநெறித் தன்மை கொண்டது. இத்தன்மையில் கத்தோலிக்கரிடம் ஒரு முரண்பட்ட நிலை தென்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் கத்தோலிக்கராக இருப்பவர்கள், பொது வாழ்க்கையில் வேறுவிதமான பாதையைப் பின்பற்றுகிறார்கள், எனவே திருஅவையின் முதல் எண்ணமே மனச்சான்றுகளுக்குப் போதிப்பதாக இருக்க வேண்டும், திருஅவை தனிப்பட்டவருக்கும் மட்டுமல்லாமல், பொதுவாகவும் ஒழுக்கநெறிகளைப் போதிக்க வேண்டும், திருஅவையின் சமூகக் கோட்பாடுகளை வைத்து, இப்போதனையைச் செய்ய முயற்சிக்கிறோம்”என்று பதில் சொன்னார் திருத்தந்தை.
மெக்சிகோவைப் பாதிக்கும் போதைப்பொருள் தொடர்புடைய வன்முறை பிரச்சனைகளுக்குப் பதில் சொன்ன போது, “மனிதரை அடிமைப்படுத்தும் பணத்தையும் அதிகாரத்தையும் வணங்குவதில் பெரும் ஆபத்துக்கள் உள்ளன. இவை போலி வாக்குறுதிகளையும் பொய்களையும் ஏமாற்றுக்களையும் முன்வைக்கின்றன. இந்த அச்சுறுத்தல்கள் குறித்து திருஅவை மக்களுக்குப் போதிக்க வேண்டும்” என்று கூறினார். போதைப்பொருள் தொடர்புடைய வன்முறைகளில், 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை, 47,600 பேருக்கு மேற்பட்டோர் இறந்தனர் என்று மெக்சிகோ அரசு அறிவித்துள்ளது.
கியூபா நாட்டின் சமூக-அரசியல் நிலவரம் குறித்துக் கேள்வி கேட்டனர். அதற்குப் பதில் சொன்ன திருத்தந்தை, “14 ஆண்டுகளுக்கு முன்னர் அருளாளர் பாப்பிறை 2ம் ஜான் பால் கியூபாவுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தை நினைவுகூருகிறேன். இப்பயணம், ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் பாதையைத் திறந்து வைத்தது. இதற்குப் பொறுமை தேவை. எனினும் இவை தொடர்கின்றன. நீதியான சமுதாயத்தை உருவாக்குவதற்கு, உரையாடல் உணர்வில் திருஅவை உதவ விரும்புகின்றது. அது எப்போதும், மனச்சான்று மற்றும் மதத்தின் சுதந்திரத்துக்கு வாழ்வுக்கு ஆதரவாக இருக்கின்றது”என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.