2012-03-23 15:22:56

திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணம் – ஒரு முன்னோட்டம்


மார்ச்23,2012. பல மாதங்களாக ஊடகங்களில் பேசப்பட்டு வந்த மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மேற்கொள்ளவிருந்த திருப்பயணம் இவ்வெள்ளி உரோம் நேரம் காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. உரோம் ஃபியுமிச்சினோ பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து ஆல் இத்தாலியா போயிங் 777ல், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி எனச் சில திருஅவைப் பிரமுகர்கள், பல பன்னாட்டு நிருபர்கள் ஆகியோருடன் மெக்சிகோ நோக்கிப் புறப்பட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்தாலிக்கு வெளியே திருத்தந்தை மேற்கொள்ளும் இந்த 23வது திருப்பயணத்தில் அவரை வழியனுப்புவதற்கு, இத்தாலிய பிரதமர் Mario Monti உட்பட பல பிரமுகர்கள் விமானநிலையம் சென்றிருந்தனர். 10,267 கிலோ மீட்டர் தூர இப்பயணத்தின் போது நிருபர் சந்திப்பையும் நடத்தினார் திருத்தந்தை. 14 மணி நேரங்கள் கொண்ட இப்பயணத்தில் தான் கடந்து செல்லும், இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், அயர்லாந்து, கிரீன்லாந்து, டென்மார்க், கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் ஆசீரையும் வழங்கும் தந்திச் செய்திகளையும் அனுப்பினார். அத்துடன் நம்பிக்கையின் செய்தியை வழங்குவதற்காகவே இப்பயணத்தை மேற்கொள்வதாகவும் அச்செய்திகளில் குறிப்பிட்டிருந்தார் திருத்தந்தை. இத்தாலிய அரசுத்தலைவர் Giorgio Napolitanoவும், தனது நன்றியையும் நல்வாழ்த்தையும் திருத்தந்தைக்குத் தெரிவித்துள்ளார். இப்பயணம் சர்வதேச அளவில் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் Napolitano குறிப்பிட்டுள்ளார். வருகிற வியாழன் வரை நடைபெறும் இத்திருப்பயணம் குறித்துத் தலத் திருஅவைகளிலும் உலக அளவிலும் பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. அனைத்துலக காரித்தாஸ் நிறுவன இயக்குனர் கர்தினால் Oscar Rodriguez Maradiaga, இத்திருப்பயணம் பற்றிப் பேசிய போது....
“இலத்தீன் அமெரிக்கத் திருஅவைக்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க திருப்பயணமாக மக்கள் நோக்குகின்றனர்; மெக்சிகோவில் இடம் பெறும் வன்முறை, கியூபாவில் நிலவும் ஏழ்மை போன்ற சமூக விவகாரங்களில் இத்திருப்பயணம் கவனம் செலுத்தும்; வன்முறையும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் நடத்தப்படும் மோதல்களும் அழகான மெக்சிகோ நாட்டையும் இலத்தீன் அமெரிக்கா முழுவதையும் எவ்வளவு தூரம் பாதித்துள்ளன என்பதை அறிவதற்கு இத்திருப்பயணம் உதவும்”
என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் கர்தினால் Maradiaga. மெக்சிகோ நாடு, பல தலைமுறைகளாக, போதைப்பொருள்களை உற்பத்தி செய்து வருவதோடு, போதைப்பொருள்கள் பிற நாடுகளுக்குச் சட்டத்துக்குப் புறம்பே எடுத்துச் செல்லப்படுவதற்கும் வாய்க்காலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2006ம் ஆண்டின் இறுதியில் Felipe Calderón என்பவர் அரசுத்தலைவராகப் பதவியேற்ற பின்னர், இந்தப் போதைப்பொருள் வியாபாரக் குற்றவாளிகளை இராணுவத்தைக் கொண்டு அடக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பலம் பொருந்திய மற்றும் பணம்படைத்த போதைப்பொருள் வியாபாரிகளோடு நடத்தப்பட்டுவரும் சண்டையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. திருத்தந்தையும் இத்திருப்பயணத்தில் இத்தகைய சமூக விவகாரங்கள் பற்றிப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மெக்சிகோ நாட்டு மெக்சிகோ நகர கர்தினால் Norberto Rivera வும்.....
“மெக்சிகோ சமுதாயத்தைச் சிறப்பானதாக அமைப்பதற்கு மக்கள் தங்கள் இதயங்களைக் கிறிஸ்துவுக்குத் திறக்க வேண்டும்; நமது அறிவுத்திறமையாலோ கனவு காண்பதாலோ அல்ல, கிறிஸ்து நம்மீது பொழிந்துள்ள அன்பினால் அன்புக் கலாச்சாரத்தை நம்மால் உருவாக்க இயலும்; போதைப்பொருள் வியாபாரிகளோடும், அதிகரித்து வரும் வன்முறையோடும் மெக்சிகோ நாடு போராடி வரும் இவ்வேளையில், நமது கதவுகளையும் ஜன்னல்களையும் இயேசு கிறிஸ்துவுக்குத் திறந்து வைப்போம், அப்போது நீதியின் உண்மையான சூரியனாகிய அவர் நமது உலகில் நுழைந்து அனைத்தையும் புதியன ஆக்குவார்”
என்று கேட்டுள்ளார். திருத்தந்தையும், மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளின் மக்களையும், இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் வாழும் மக்களையும் விசுவாசத்தில் ஆழப்படுத்தச் செல்வதாக ஏற்கனவே மூவேளை செப உரையில் தெரிவித்துள்ளார்.
RealAudioMP3 திருத்தந்தை இலத்தீன் அமெரிக்காவுக்கு மேய்ப்புப்பணிப் பயணத்தைத் தொடங்கியுள்ளதாகச் சில ஊடகங்கங்கள் எழுதுகின்றன. இதற்கும் காரணம் உண்டு. வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் ரோமானிய மொழிகளைப் பேசும் பகுதி, இலத்தீன் அமெரிக்கா என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாக, இஸ்பானியம் மற்றும் போர்த்துக்கீசியம் பேசும் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியக் கடலிலுள்ள கியூபா, தொமினிக்கன் குடியரசு ஆகிய தீவு நாடுகள், அமெரிக்காவின் புவேர்த்தோ ரிக்கோ ஆகியவை இலத்தீன் அமெரிக்கா எனச் சொல்லப்படுகின்றன. இலத்தீன் அமெரிக்கா, இப்பூமியின் நிலப்பரப்பில் 3.9 விழுக்காடாகும்.
இவ்வெள்ளியன்று திருத்தந்தை திருப்பயணம் மேற்கொண்டுள்ள மெக்சிகோ நாடு, வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்நாட்டிற்கு வடக்கே அமெரிக்க ஐக்கிய நாடும், தெற்கிலும் மேற்கிலும் பசிபிக் பெருங்கடலும், தென்கிழக்கே குவாத்தமாலாவும் பெலிசும், கரீபியன் கடலும், கிழக்கே மெக்சிகோ வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் பரப்பளவு ஏறக்குறைய 20 இலட்சம் சதுர கிலோமீட்டர்கள். இது அமெரிக்கக் கண்டத்தின் ஐந்தாவது பெரிய நாடாகவும், உலகளவில் 13வது பெரிய குடியரசு நாடாகவும், உலகில் இஸ்பானிய மொழி பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட நாடாகவும், உலகில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட 11 வது நாடாகவும் கருதப்படுகின்றது. 31 மாநிலங்களையும், தலைநகரான மெக்சிகோ நகரத்தை, தனிப்பட்ட மாவட்டமாகவும் கொண்டுள்ள இந்நாட்டு மக்களில் சுமார் 92 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். அதாவது, மெக்சிகோவில் வாழும் 10,84,26,000 மக்களில் 9,96,35,000 பேர் கத்தோலிக்கர்கள். அந்நாட்டில் தற்போது 163 ஆயர்கள், 16,234 குருக்கள், 30,023 இருபால் துறவியர் 25,846 பேர் துறவு வாழ்வைத் தேர்ந்தெடுக்காமல் பணியாற்றுபவர்கள் உள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
1520ம் ஆண்டில் பொன்னையும் பிற வளங்களையும் தேடி மெக்சிகோ சென்ற இஸ்பானியர்கள், மெக்சிகோவைத் தங்களது காலனி நாடாக்கி அதற்கு, புதிய இஸ்பெயின் என்றும் பெயரிட்டனர். எனினும், 1821ம் ஆண்டில் மெக்சிகோ சுதந்திரம் அடைந்த பின்னர், தங்களது நாட்டின் பெயரை, தலைநகரின் பெயரிலே வைத்தனர். பல ஆண்டு உள்நாட்டுக் கலவரங்கள், இராணுவப்புரட்சி, சர்வாதிகார ஆட்சி, குருக்களுக்கு எதிரான கலவரம் எனப் பல புரட்சிகளையும் இந்நாடு எதிர்கொண்டுள்ளது. “Cristero” என்ற பெயரில் 1926ம் ஆண்டு முதல் 1934ம் ஆண்டு வரை இடம் பெற்ற சண்டையில் குறைந்தது 40 குருக்கள் கொல்லப்பட்டனர். பின்னர், ஒரு கோடியே 50 இலட்சம் பேருக்கு 334 குருக்கள் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர். சுமார் 70 ஆண்டுகளாக ஒரே கட்சி ஆட்சி செய்த மெக்சிகோவின் நிலைமை, 1997ம் ஆண்டின் பொதுத் தேர்தல்களில் மாற்றம் அடைந்தது. தற்போது மெக்சிகோ தொழில்வளர்ச்சியிலும் வேகமாக முன்னேறி வருகிறது.
அதேசமயம், ஏழை மக்கள் சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் எல்லைப்பகுதியைத் தாண்டி அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு வேலைதேடிச் செல்கின்றனர். இம்முயற்சியில், ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கானோர் கைது செய்யப்படுகின்றனர். உலகில் பல்வேறு உயிரினங்களைப் பெருமளவாகக் கொண்ட 18 நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. உலகிலுள்ள உயிரின வகைகளில் 10 முதல் 12 விழுக்காடு மெக்சிகோவில் உள்ளது. இந்நாட்டில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பல்வகை உயிரினங்கள் உள்ளன என்று சொல்லப்படுகிறது. இந்நாட்டில் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதி, “பாதுகாக்கப்பட்ட இயற்கைவளப் பகுதி” எனக் கருதப்படுகிறது.
இத்தகைய வளமைமிக்க மெக்சிகோ நாட்டின் Guanajuato மாநிலத்தில் Guanajuato, Leon ஆகிய நகரங்களில் இத்திங்கள் வரை மேய்ப்புப்பணிப் பயணத்திட்டங்களை நிகழ்த்துவார் திருத்தந்தை. இந்நகரங்களில் 48 மணி நேரங்கள் நடைபெறும் இத்திருப்பயண நிகழ்ச்சிகளில் அந்நாடு, சுதந்திரம் பெற்ற 200வது ஆண்டு நிறைவைச் சிறப்பிப்பது மையமாக இருக்கின்றது. “Cristero” சண்டையில் இறந்தவர்கள் நினைவாக 1940களில் கட்டப்பட்ட 65 அடி உயர கிறிஸ்து அரசர் திருவுருவம் அமைந்துள்ள இடத்தில் இஞ்ஞாயிறன்று திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியில் 4 இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Guanajuato நகரில் திருப்பயணத் திட்டங்களை நிறைவு செய்து கியூபா செல்லும் திருத்தந்தை, அந்நாட்டிலும் 48 மணி நேரங்கள் பயண நிகழ்ச்சிகளை நிறைவு செய்து வருகிற வியாழன் உரோம் நேரம் காலை 10.15 மணிக்கு உரோம் வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருத்தந்தையின் இந்த 23வது வெளிநாட்டுத் திருப்பயணம் சிறப்புற அமைய வாழ்த்துவோம், செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.