2012-03-23 15:11:12

உலக இளையோர் நாளைக் குறித்து ஆலோசனைகள் நடத்த, பொது நிலையினருக்கான திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள கூட்டம்


மார்ச்,23,2012. உலகின் பல நாடுகளில் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள இளையோரை ஒன்று திரட்டி, வரும் ஆண்டு நடைபெற உள்ள உலக இளையோர் நாளைக் குறித்து ஆலோசனைகள் நடத்த பொது நிலையினருக்கான திருப்பீட அவை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை உரோம் நகருக்கருகே உள்ள Rocca di Papa எனுமிடத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் 98 நாடுகளிலிருந்து இளம் பிரதிநிதிகளும், 2013ம் ஆண்டு ரியோவில் நடைபெற உள்ள உலக இளையோர் நாளை ஏற்பாடு செய்துவரும் குழுவினரும் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிலையினருக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko இக்கூட்டத்தைத் துவக்கி வைப்பார். 2011ம் ஆண்டு மத்ரித் நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாளைக் குறித்த மறு ஆய்வும், 2013ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற உள்ள அடுத்த உலக இளையோர் நாளின் திட்டங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி, குருத்து ஞாயிறன்று உலக இளையோர் நாள் கொண்டாடப்படும்போது, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்தும் திருப்பலியில் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து இளையோரும் கலந்து கொள்வர்.








All the contents on this site are copyrighted ©.