2012-03-22 15:23:02

மார்ச் 21, இனப் பாகுபாடுகளைக் களைவதற்கு உருவாக்கப்பட்ட உலக நாளையொட்டி ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி


மார்ச்,22,2012. உலகின் பல நாடுகளில் உருவாகியுள்ள மோதல்களில் இனப் பாகுபாடுகள் ஒரு முக்கிய அம்சமாக இருப்பது ஆபத்தான ஒரு போக்கு என்றும், இந்தப் போக்கைத் தடுக்காவிடில், பெரும் கலவரங்களாக மாறி, பல மனித உயிர்கள் பலியாகும் என்று ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 21 இப்புதனன்று இனப் பாகுபாடுகளைக் களைவதற்கு உருவாக்கப்பட்ட உலக நாளையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், இன வெறியும், இனப் பாகுபாடுகளும் மனித சமுதாயத்தில் வெறுப்பையும் அச்சத்தையும் வளர்க்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவது மனித குலத்திற்கு நல்லதல்ல என்று கூறினார்.
இன வெறி ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமைக்கு எதிரான ஒரு குற்றம் என்றும், இதனால் தனிப்பட்டவர்கள், குடும்பங்கள், சமுதாயங்கள் அனைத்தும் தாறுமாறாகக் கிழித்தெறியப் படுகின்றன என்ற கவலையை வெளியிட்டார் பான் கி மூன்.
2007ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுக்குள் நிகழ்ந்த பல மோதல்களில் 55 விழுக்காடு, இன அடிப்படையில், சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகளை உலகில் நிகழ்த்தியுள்ளன என்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவி பிள்ளை கூறினார்.
தென் ஆப்ரிக்காவில் நிறவெறி கொள்கையை எதிர்த்து, Sharpeville எனுமிடத்தில் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் சுட்ட நிகழ்ச்சி 1960ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி நிகழ்ந்தது. இந்த நாளை, இனப் பாகுபாடுகளைக் களைவதற்கு உருவாக்கப்பட்ட உலக நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.