2012-03-22 14:20:35

கவிதைக் கனவுகள் .......போராட்டம்


மண் மனிதனுக்குச் சொந்தமில்லை,
மனிதன் தான் மண்ணுக்குச் சொந்தம்
கொள்கைக்காகக் கொல்லப்படும்
மனிதரை நினைக்கும் போது
மனதில் தோன்றும் எண்ணமிது.
கொள்கைமனிதரின் மரணம் – பல
கொள்கை மனிதரின் உயிர்ப்பு

கொள்கைக்காகப் போராட்டங்கள்
கங்கையை மாசின்றி காக்கப் போராட்டம்
காடுமலை அழிவைக் காக்கப் போராட்டம்
காயும் களனிகளுக்காய்ப் போராட்டம்
மணல்கொள்ளை தடுப்புப் போராட்டம்
அணுக்கதிர் ஆபத்தை அகற்ற போராட்டம்
வறுமை விரட்டப் போராட்டம்
வயிற்றுப் பசிக்குப் போராட்டம்
மாண்பு காக்கப் போராட்டம் - இவை
வாழ்வியல் போராட்டங்கள்...

அர்த்தமுள்ள போராட்டங்கள் அடக்கப்படலாம்!
அதிகாரவர்க்கம் ஆர்ப்பரிக்கலாம்!
உண்மைகள் உதைக்கப்படும் போது
உதயமாகும் வெற்றிகள், வெற்றிகளா?
நீதி நசுக்கப்படும் போது
உருவாகும் வெற்றிகள், வெற்றிகளா?
இல்லை, இவ்வெற்றிகளுக்கு அற்ப ஆயுள்
இவ்வெற்றிகள் நிரந்தரமற்றவை.
உண்மைகள் என்றாவது உறங்கியது உண்டா உலகில்.








All the contents on this site are copyrighted ©.