2012-03-20 15:31:48

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 111


RealAudioMP3 ஆறு ஆண்டுகளுக்கு முன், அருட்பணியாளராக அருட்பொழிவு செய்யப்பட்ட அடுத்தநாள் எனது சொந்த ஊரிலே முதல் திருப்பலியை நிறைவேற்றினேன். அத்திருப்பலித் தயாரிப்பிற்கும், அதன்பின் நடந்த விருந்திற்கும் என்னுடைய அண்ணன் அலைந்த அலைச்சல் இன்னும் என் கண்முன்னே நிற்கிறது. என்ன ஓட்டம்! எத்தனை வேலைகள்! ஓரே ஆளாக இருந்து அத்தனை வேலைகளையும் செய்து முடித்தார். அதை நினைத்துப் பார்க்கும்போது என்னையும் அறியாமல் எனது கண்களில் கண்ணீர் வந்துவிடுகிறது. அவரது செயலைப் பலரிடம் பெருமையாகச் சொல்லியிருக்கிறேன்.
அன்பார்ந்தவர்களே! இது என்னுடைய அனுபவம். இதே போல உங்களுக்கும் பல அனுபவங்கள் இருக்கலாம். ஒரு சிலர் செய்த செயல்களை நம்மால் மறக்கவே முடியாது. அதைப் பலரிடம் பெருமையாகப் பேசுவோம். அவரைப் பற்றி அவரது செயல்களைப் பற்றி போற்றிப் புகழ்வோம். இதே போன்ற ஒரு புகழ்ச்சிதான் இன்று நாம் சிந்திக்கும் திருப்பாடல் 111. இத்திருப்பாடலில் ஆசிரியர் இறைவனின் செயல்களைப் புகழ்ந்து பேசுகிறார். தன் வாழ்நாள் முழுவதும் இறைவன் தனக்குச் செய்த செயல்களை நினைத்துப் பார்க்கிறார்.
சொற்றொடர்கள் 2 முதல் 4முடிய மற்றும் 7, 8வது சொற்றொடர்கள்.
ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும்; அவற்றை ஆய்ந்துணர்வர்.
அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.
அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும்; உடையவர் ஆண்டவர்.
அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை.
என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை.

இறைவன் பல நன்மைகள் செய்தார் என இத்திருப்பாடலின் ஆசிரியர் பொதுவாகச் சொல்லவில்லை. அதே சமயம் என்னென்ன செய்தார் என விளக்கமாகவும் சொல்லவில்லை. மாறாக, பல்வேறு வினைஉரிச்சொற்களைப் (Adverbs) பயன்படுத்துகிறார். இறைவனின் செயல்கள் நீதியானவை, நேர்மையானவை, நிலையானவை, உயர்ந்தவை, உண்மையானவை, வியப்புக்குரியவை, அருள்மிக்கவை மற்றும் இரக்கமுள்ளவை என்று குறிப்பிடுகிறார். இத்தகையச் செயல்களை ஆண்டவர் செய்தார் என்று சொல்லும்போது, இச்செயலைச் செய்த ஆண்டவரைப் பற்றி சொல்லாமலேயே நமக்குப் புரிகிறது. அதே போல நமது செயல்கள்தான் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்கின்றன. எனவே இன்றைய விவிலியத்தேடலில் நமது செயல்களைப் பற்றி சற்று சிந்திப்போம்.

நமது செயல்கள் மட்டுமே நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தீர்மானிக்கின்றன என்று சொல்லிவிட முடியாததெனினும், நமது சமூகத்தில், பெரும்பாலான நேரங்களில், நமது செயல்களை வைத்துத்தான் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை முடிவு செய்கிறார்கள் என்பதை மறுக்கவும் முடியாது. அவர் நல்ல மனிதர், தாராள குணமுடையவர், இரக்கமுள்ளவர், நன்றியுள்ளவர் என்ற நல்ல பெயர்களை வாங்கித் தருவதும் அவர் கோபக்காரர், சோம்பேறி, ஏமாற்றுப்பேர்வழி, பொறாமை பிடித்தவர் என்ற கெட்ட பெயர்களைப் பெற்றுத் தருவதும், நமது செயல்கள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
நமது எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளை யாரும் நமது மனதிற்குள் புகுந்துபார்க்கமுடியாது. மாறாக நாமாகத்தான் வெளிப்படுத்த வேண்டும். எப்படி வெளிப்படுத்துவது? ஒன்று பேச்சுவழியாக. இரண்டாவது செயல்கள் வழியாக. பேச்சு வழியாக எண்ணங்களை வெளிப்படுத்துவது எளிதானது. அதை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் பேசியதை செயல்படுத்துவது மிகக் கடினம். “Actions speak louder than words” என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள். பேச்சை விட செயல்களே வலிமையானவை. நமது இதயங்களைத் தொடக்கூடிய வல்லமை படைத்தவை.

இயேசுவின் வார்த்தை மட்டுமன்று, அவரது வாழ்வும் இதயத்தைத் தொட்டது. ஆண்டவர் இயேசு போதித்தார். மனித வாழ்விற்குத் தேவையான நல்ல கருத்துக்களை அழகான உவமைகள் வழியாகச் சொன்னார். அவர் போதித்ததைச் செயலில் காட்டவில்லையென்றால், நாம் 2000 ஆண்டுகளுக்குப் பின்னும் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போமா? மனிதகுலத்தின் மீது மிகுதியான அன்பு கொண்டிருந்தார். ஆனால் அந்த அன்பிற்காக பாடுகள் பல பட்டு, சிலுவை சுமந்து, சிலுலையிலேயே அறையப்பட்டு உயிர் நீக்கவில்லையென்றால், அகில உலகம் அவரை நினைவுகூறுமா? அவர் பல்வேறு காரியங்களைச் சொன்னாலும் அவருடைய செயல்கள்தான் நம் மனதை கட்டிப்போட்டிருக்கின்றன. அவரது போதனை செயலில் வெளிப்பட்டது. அன்பு அவரது வாழ்வில் வெளிப்பட்டது.
யோவான் நற்செய்தி 13ம் பிரிவு 13 முதல் 15 முடிய உள்ள சொற்றொடர்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
நீங்கள் என்னைப் 'போதகர்' என்றும் 'ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.

அன்பார்ந்தவர்களே! இவ்வுலகில் மனிதர்களாகப் பிறந்த எல்லாருக்குமே நல்ல செயல்களை மட்டும் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த ஆசையை எத்தனை பேர் செயல்படுத்துகிறோம்? நாம் நாள்தோறும் பல்வேறு காரியங்களைச் செய்கிறோம். ஆனால் அவற்றைப் பற்றிச் சிந்திக்கிறோமா? நாம் செய்யும் செயல்களை ஆய்வு செய்து பார்க்கிறோமா? நமது சொற்களுக்கும், சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? நமது செயல்கள் யாரை மையப்படுத்தி இருக்கின்றன? நம்மை மட்டும் மையப்படுத்தியவையா? அல்லது பிறரை மையப்படுத்தியவையா? நாம் செய்யும் செயல்களின் விளைவுகள் என்னென்ன? என்பதையெல்லாம் ஆற அமர சிந்திக்க வேண்டும். இதைத்தான் தூய பவுல் இவ்வாறு சொல்கிறார். ஒவ்வொருவரும் தம் செயல்களை ஆய்ந்து பார்க்கட்டும். (கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 6: 4)

இறைவார்த்தையின் ஒளியிலும், அயலாரிடையே நாம் காண்கிற நல்ல செயல்களோடும் ஒப்பிட்டுப் பார்த்து நமது செயல்களை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் நாம் என்ன பெரிதாக தவறு செய்துவிடப் போகிறோம் என்பது போலதான் நமது மனப்பாங்கு இருந்துவிடுகிறது. நமது செயல்களை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, எல்லாமே நல்லவைகளாக அல்லது பெரிய தவறில்லை என்பது போலத் தெரியும் ஆனால் சிறிதோ, பெரிதோ அவை அனைத்தும் சேர்ந்துதான் நமது ஆளுமையை உருவாக்குகின்றன, நம்மை உலகிற்கு வெளிப்படுத்துகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.
நாம் செய்கின்ற தவறு சிறியதாக இருந்தாலும், அதை ஒதுக்கிவிட்டு வாழப் பழகிக் கொண்டால், நமது வாழ்க்கை வியக்கத்தக்கதாக மாறும். பொருள்ரீதியாக பயனில்லாமல் இருக்கலாம். ஆனால் அடுத்த கணமே இறப்பதற்குத் தயார் என்னும் அளவு நிறைவானச் சூழலை உருவாக்கித் தருவது நமது நல்ல செயல்களே. அதுதான் நிம்மதி. அதுதான் வாழ்வின் முழுமை.
ஒரு பானையில் நீர் நிரம்பும் அளவுக்கு அதிலிருந்து காற்று குறைந்து விடுவது போல் நமது நல்ல செயல்கள், நம்மில் நிரம்பும் அளவுக்கு நமது தீயவினைகள் நம்மை விட்டு அகலும். அந்த அளவு தெய்வீக ஆற்றல் நம்மில் மலரும்.

சிறுவயதிலே படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அன்பு என்பவர் இளம் வயதிலேயே தன் மனைவியை இழந்துவிட்டு, பிறந்து சில மாதங்களே ஆன தன் குழந்தையை, தாயும் தந்தையுமாக இருந்து வளர்த்து வந்தார். தாய் இல்லாத பிள்ளை என்பதால் அதிக செல்லம் கொடுத்து வளர்த்தார். அவன் மனம் நோகக்கூடாது என்பதற்காக கண்டிக்க வேண்டிய காரியங்ளைக் கூட கண்டிக்காமல் இருந்தார். அவன் வளர்ந்து பள்ளிக்குச்செல்ல ஆரம்பித்தான். ஆனால் பள்ளிப்பருவத்திலேயே பல்வேறு தீயப் பழக்கங்களை வளர்த்துக்கொண்டான். அப்பாவோ ஒரே மகன் என்பதால் அடிக்க மனமில்லாமல் சொல்லிப் பார்த்தார் ஆனால் அவன் கேட்பதுபோல் தெரியவில்லை. எனவே அவன் ஒவ்வொரு தவறு செய்யும்போதும், ஒவ்வொரு கெட்டபழக்கத்திற்கும் ஆளாகும்போது அவர்கள் வீட்டுக் கதவில் ஓர் ஆணி வீதம் அடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அக்கதவின் மேற்பகுதி முழுவதும் ஆணிகளால் நிரம்பிக் காணப்பட்டது. காலம் உருண்டோடியது. மகன் தன் தவற்றை உணர்ந்தான். திருந்த ஆரம்பித்தான். அவன் ஒவ்வொரு கெட்ட பழக்கத்தையும் விட்டு திருந்திய போது, ஏற்கெனவே கதவில் அடித்த ஒவ்வோர் ஆணியாகப் பிடுங்க ஆரம்பித்தார் அப்பா அன்பு. இறுதியில் மகன் முழுவதுமாக திருந்தி நல்ல மனிதான மாறியபோது, அக்கதவில் ஓர் ஆணி கூட இல்லை. ஆனால் ஆணிகளின் தழும்பு அசிங்கமாக இருந்தது. அத்தழும்புகளைக் காட்டி “நீ செய்த தவறுகளால் ஏற்பட்ட தழும்புகள், நீ நல்ல மனிதனாக மாறிய பிறகு கூட மறையவில்லை பார்த்தாயா”? என்று கேட்டாராம். நாம் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், நமது செயல்களை ஆய்வு செய்து திருத்த வேண்டியவைகளை திருத்திக்கொள்ள வேண்டும். பிறகு பார்த்துக் கொள்வோம் என விட்டுவிட்டால் என்ன நடக்கும் என்பதை இக்கதை நமக்குத் தெளிவாகச் சொல்கின்றது.

அன்பார்ந்தவர்களே! நமது செயல்களே நாம் யார் எப்படிப்பட்டவர்கள் என சமுதாயம் தீர்மானிக்கக் காரணமாயிருக்கின்றன. எனவே நமது செயல்களைக் கூர்ந்து கவனிப்போம். நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, தவறானவற்றைத் திருத்திக்கொள்ள தவக்காலம் நம்மை அழைக்கிறது. மனமாற்றத்தின் காலமான தவக்காலத்தைப் பயன்படுத்திக் கொள்வோம். நம் தந்தையாம் இறைவனின் செயல்களைப் பற்றிய புகழ்ச்சிகளைக் கேட்ட நாம், நம்முடைய செயல்களும் அவரைப் போல பல வினைஉரிச்சொற்களைப் பெறாவிட்டாலும் உண்மை நேர்மை, அருள் மற்றும் இரக்கமுடையவை என்று சொல்லுமாறு வாழ வேண்டும். இதுவே இத்திருப்பாடல் நமக்குச் சொல்லும் செய்தி.








All the contents on this site are copyrighted ©.