2012-03-20 15:07:56

திருத்தந்தையின் திருப்பயணம் மெக்சிகோ மக்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும் - திருப்பீடத் தூதர்


மார்ச்20,2012. போதைப்பொருள் வியாபாரிகளால் ஏற்பட்ட வன்முறைகளால் சில ஆண்டுகளாகத் துன்புற்று வரும் மெக்சிகோவுக்குத் திருத்தந்தையின் திருப்பயணம் உண்மையிலேயே ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் மெக்சிகோவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Christophe Pierre.
இவ்வெள்ளியன்று திருத்தந்தை தொடங்கும் மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருப்பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Pierre, இப்பயணம் குறைந்த நாள்களைக் கொண்டிருந்தாலும், துன்பம் நிறைந்த சூழலில் வாழும் மெக்சிகோ மக்களுக்கு திருத்தந்தையின் வார்த்தைகள் நம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கும் என்று கூறினார்.
குடியேற்றதார மெக்சிகோ மக்கள் குறித்தும் பேசிய பேராயர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பெருமளவான மெக்சிகோ மக்களில் பலர், அந்நாட்டுக் குடியுரிமை இல்லாமல் மறைவாக வாழ்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
வறுமை காரணமாகவும், பொருளாதார வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்திலும் மெக்சிகோ மக்களில் பலர், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்கின்றனர் எனவும் பேராயர் கூறினார்.
மேலும், திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்ளும் மெக்சிகோ நாட்டு Guanajauto நகர மேயர் Edgar Castro Cerrillo, அந்நகரத்தின் அடையாளச் சாவிகளைத் திருத்தந்தைக்கு வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
வன்முறை அதிகரித்துள்ள ஒரு சமுதாயத்தில் திருத்தந்தையின் செய்தி அமைதியும் ஊக்கமும் தருவதாய் இருக்குமென்றும் மேயர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.