2012-03-20 15:11:13

அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் நாடு தழுவிய செபம் - ஆயர்கள் அறிவிப்பு


மார்ச்20,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள கருத்தடைக்குச் சார்பான விதிமுறை போன்ற அண்மை அச்சுறுத்தல்களுக்கு எதிராக, சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில், நாடு தழுவிய செப பக்தி முயற்சி ஒன்றை அறிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
“சமய சுதந்திரத்திற்குச் செபம்” என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், அமெரிக்காவில் மனச்சான்றின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு செபமும் தபமும் செய்யுமாறு அனைத்து விசுவாசிகளையும் கேட்டுள்ளனர்.
நமது வலிமையின் கடைசி ஆதாரம் செபமே என்றுரைக்கும் ஆயர்கள், கடவுளின்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது என்றும் கூறியுள்ளனர்.
கருத்தடை செய்தல், கருவுறாமல் இருப்பதற்கான மருத்துவம், கருக்கலைப்புக்கான மருந்துகள் ஆகியவற்றுக்கு நலவாழ்வு காப்பீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கு மருத்துவப் பணியாளர்களுக்கு விதிமுறைகளை அறிவித்துள்ளது ஒபாமா நிர்வாகம். இப்பணியாளரின் சமய நம்பிக்கைக்கு எதிராக இருந்தால்கூட அவர்கள் அதனைச் செய்யுமாறு கூறப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.