2012-03-19 15:33:27

வாரம் ஓர் அலசல் – வணிகமாகும் தண்ணீர்


மார்ச்19,2012. குறும்புகளுக்குப் பெயர் போனவர் முல்லா. இவர் ஒருநாள் அடுத்த வீட்டுக்காரரிடம், மண்பானை ஒன்றை இரவலாக வாங்கி வந்தார். ஒரு வாரம் கழித்து அவரிடம் சென்று, “ஐயா, நீங்கள் இரவல் தந்த மண்பானை ஒரு குட்டிப் போட்டிருக்கிறது. அதை உங்களிடமே பத்திரமாகத் திருப்பித் தந்து விடுகிறேன்” என்று சொல்லி, அந்த மண்பானையோடு குட்டி மண்பானை ஒன்றையும் சேர்த்துக் கொடுத்தார். “எனது பானையல்லவா அது. குட்டி போடாமல் இருக்குமா?” என்று சொல்லி, மிகுந்த மகிழ்ச்சியோடு இரண்டு பானைகளையும் வாங்கிக் கொண்டார் இரவல் கொடுத்தவர். ஒரு வாரம் கழித்து அதே ஆளிடம் சென்று மூன்று பித்தளைப் பானைகளை இரவலாகக் கேட்டார் முல்லா. அவரும் பழைய நினைப்பில் மகிழ்ச்சியோடு கொடுத்தார். ஒரு வாரம் கழித்து முல்லாவிடம் சென்று அந்தப் பித்தளைப் பானைகளைத் திருப்பிக் கேட்டார் இரவல் கொடுத்தவர். முல்லா மிகுந்த சோகத்தோடு சொன்னார் : “ஐயா, அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள்?, உங்களது பித்தளைப் பானைகள் மூன்றும் தற்கொலை செய்து கொண்டன. நானும் அழுது கொண்டே அவற்றை நல்லடக்கம் செய்து விட்டேன்” என்று. முல்லாவின் அழுத முகத்தைப் பார்த்து ஆடிப்போய் விட்டார் அவர். “என்னய்யா கதை இது! எங்காவது பித்தளைப் பானைகள் தற்கொலை செய்து கொள்ளுமா?, யாரை நம்பச் சொல்லுகிறீர்?” என்று கேட்டார் இரவல் கொடுத்தவர். அப்போது முல்லா சொன்னார் : “ஐயா, உங்களது மண்பானை குட்டிப் போடும் போது, பித்தளைப் பானைகள் தற்கொலை செய்து கொள்ளாதா?” என்று.
அன்பு நேயர்களே, இக்காலத்தில் நாடுகளிலும் நகரங்களிலும் நடப்பது இதுதான். தனக்கு ஒன்று சாதகமாய் இருந்தால் அதற்காக எத்தனைப் பொய்களையும், மெய்களாக அள்ளி வீசுவதற்கு யாரும் தயங்குவதில்லை. அரசியல் தலைவர்கள் தொடங்கி அலுவலகப் பணியாள்கள் வரை எல்லா மட்டங்களிலும் இதைக் காண முடிகின்றது. தனக்குச் சாதகம் என்று வந்து விட்டால் பொய்களும் இனிப்புப் பொருள்களாக மாறி விடுகின்றன. இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணப்படங்கள், பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சியில் கடந்த வாரத்திலும் ஒளிபரப்பாகின. “இலங்கையின் கொலைக்களங்கள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இப்படங்கள் குறித்து இலங்கை அரசு சொல்லும் கதைகள் நாம் அறிந்ததே. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடங்கி ஒவ்வொரு விவகாரமாகப் பிரித்துப் பார்த்தால் நாம் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும். இன்று தண்ணீருக்காகத்தான் எத்தனை போராட்டங்கள் எத்தனை நாடுகளில்!
இந்தப் பூமியில் வாழும் உயிரினம் அனைத்தின் ஆதாரமாக இருப்பது தண்ணீர். அதனால்தான் “நீரின்றி அமையாது உலகு” என்று வள்ளுவரும் சொன்னார். தண்ணீர் இல்லாவிட்டால் மண்ணும் காற்றும்கூட வற்றிப் போய்விடும். இப்பூமியில் தண்ணீர் இல்லையென்றால் அது நிலவு போல்தான் தோன்றும். இன்று உலகம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை, கழுத்தை நெரிக்கும் பிரச்சனையாக விசுவரூபம் எடுத்துள்ளது. உலகில் அதிகரித்து வரும் தண்ணீர்ப் பிரச்சனையை கருத்தில் கொண்டு, ஐ.நா.நிறுவனமும், 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளை, “வாழ்வுக்குத் தண்ணீர்” என்ற தலைப்பில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகத் தண்ணீர் பேரவையும், 1997ம் ஆண்டிலிருந்து, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீர்ப் பிரச்சனைகள் குறித்த அனைத்துலக மாநாட்டை நடத்தி வருகின்றது. இப்பேரவையின் ஆறாவது மாநாடு, கடந்த வாரம் முழுவதும் பிரான்சின் Marseille லில் நடந்தது. இதில் 140 நாடுகளின் அமைச்சர்கள், 800 வல்லுனர்கள், என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தண்ணீரின் எதிர்காலம் குறித்து விவாதித்தார்கள். இந்த மாநாட்டிற்கென ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில்.....
உலகில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் சுத்தமான குடிநீரைப் பெறுவது மிகுந்த சவால் நிறைந்த விடயமாக இருக்கும். 2050ம் ஆண்டளவில் உலகின் மக்கள்தொகை 900 கோடியாக உயரும். எனவே உணவுப் பொருள்களின் தேவை, கழிவறை வசதிகளின் தேவை அதிகரிக்கும். இதனால் தண்ணீரின் தேவையும் அதிகரிக்கும். தற்போது 250 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை. அத்துடன், பத்தில் ஒருவருக்கு நல்ல குடிநீருக்கான வாய்ப்பும் கிடையாது. உலகில், ஏழு நாடுகளுக்கு ஒரு நாடு வீதம், தனது நாட்டின் தண்ணீர்த் தேவையில் 50 விழுக்காட்டுக்கு அண்டை நாட்டைச் சார்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்து நாடு வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டில் ஒவ்வொருவரும் ஒரு நாளில் 4,200 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். இதில் 82 விழுக்காட்டுத் தண்ணீர் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் சுவிட்சர்லாந்தில்தான் தண்ணீர் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், உலகில் நிலத்தடி நீர்மட்டமும் கடந்த 50 ஆண்டுகளில் மும்மடங்கு வேகத்தில் குறைந்துள்ளது.......
இருப்பினும், உலகில் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கு வசதியின்றி இருக்கும் மக்களின் எண்ணிக்கையை 2015ம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைக்கும் ஐ.நா.வின் திட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, Marseilleல் நடந்து முடிந்துள்ள உலகத் தண்ணீர் பேரவையின் இந்த ஆறாவது மாநாட்டின் தலைவரும், உலகத் தண்ணீர் பேரவையின் உதவித் தலைவருமான Ben Braga சொல்லியிருக்கிற RealAudioMP3 ார். திருப்பீடமும், இந்த ஆறாவது மாநாட்டுக்குத் தனது பங்களிப்பாக, “தண்ணீர் வாழ்வுக்கு முக்கிய ஆதாரம்” என்ற தலைப்பில் ஒரு சிறிய கையேட்டையும் வெளியிட்டது. மார்ச் 22, இவ்வியாழனன்று, “தண்ணீரும் உணவுப் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் உலகத் தண்ணீர் தினமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த உலக தினம் மற்றும் Marseilleல் நடந்து முடிந்துள்ள தண்ணீர் குறித்த மாநாடு குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்டும், “தண்ணீர் குறித்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உலகினர் எடுத்துள்ள முயற்சிகள், அனைவருக்கும் சமமான, பாதுகாப்பான மற்றும் போதுமான தண்ணீர் கிடைக்க வழி செய்யும். இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கான உரிமையும், உணவும் கிடைப்பது ஊக்குவிக்கப்படும். இக்காலத்திலும் வருங்காலத்திலும் வாழ்வோரின் நலனுக்காக இப்பூமியின் நன்மைகள் பொறுப்புடன் பயன்படுத்தப்படும்” என்று கூறினார்.
RealAudioMP3 அன்பு நேயர்களே, உலகில் இன்றும் சுமார் நூறு கோடிப் பேர் பசியால் வாடுகின்றனர். சுமார் 80 கோடிப் பேருக்கு இன்னும் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. நீர் வளங்களும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தண்ணீர் குறித்த பிரச்சனை எங்கோ நடந்து கொண்டிருக்கின்றது என்று நாம் வெறுமனே இருந்து விடமுடியாது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடுகொடுக்கும் விதத்திலும், ஒவ்வொரு மனிதருக்கும் சத்துணவு கிடைப்பதற்கெனவும் நாம் ஒவ்வொருவருமே உதவி செய்ய முடியும் என்று ஐ.நா. கூறுகிறது. மனிதர் ஒவ்வொருவரும் நாளொன்றுக்குக் குறைந்தது 2 லிட்டர் முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன், ஒவ்வொரு நாளும் நமது மற்ற தேவைகளுக்கென சுமார் 2,000 முதல் 5,200 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது. நமது இரத்தத்தில் 83 விழுக்காடும், மூளையில் 70 விழுக்காடும், நுரையீரலில் 90 விழுக்காடும் தண்ணீர் இருக்கிறது. மொத்தத்தில் மனித உடல் 70 விழுக்காட்டுத் தண்ணீராலானது. குடிநீரில் 64 வகையான மருந்துப் பொருட்கள் கலந்திருப்பதாகவும், பலவகையான நோய்களைக் குணமாக்கும் சக்தி அவற்றுக்கு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். எனவே, தண்ணீர் பற்றி அதிகம் பேசப்படுகின்ற இந்நாட்களில் நாமும் நமக்குக் கிடைக்கும் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்று சிந்திப்பது நல்லது.
உலகத் தண்ணீர் தினத்திற்கென ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்டுள்ள செய்தியிலும், வேளாண்மையில் தண்ணீரை விவேகமின்றி பயன்படுத்துவதால், உலகினரின் பசியைப் போக்கும் நமது முயற்சி தோல்வியைத் தழுவும் என்றும், வறட்சியையும், அரசியல் நிலையற்றதன்மையையும் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். எனவே ஆரோக்யமான சத்துணவைச் சாப்பிடுவது, தண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்துவது, உணவுப்பொருட்களைச் சேதமாக்காமல் இருப்பது, குறைந்த தண்ணீரில் நல்ல தரமானதும் அதிகமான உணவையும் உற்பத்தி செய்வது ஆகியவற்றின் வழியாக நாம் ஒவ்வொருவருமே உலகின் தண்ணீர் பிரச்சனை குறைவதற்கு உதவி செய்யலாம். உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களில் 30 விழுக்காடு ஒருபோதும் உண்ணப்படுவதில்லை எனவும், அதனால் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் இழக்கப்பட்ட தண்ணீர் எனவும் ஐ.நா. தெரிவிக்கிறது. இப்பூமியின் சுமார் 70 விழுக்காட்டுப் பகுதி நீரினால் சூழ்ந்துள்ளது. இதில் உப்புநீர் 97 விழுக்காடு. மொத்தநீரில் ஒரு விழுக்காடு மட்டுமே மனிதரின் பயன்பாட்டுக்கு உதவும் சுத்தத் தண்ணீர். 1850களில் பூதக்கண்ணாடி (microscope) கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே தண்ணீரிலிருக்கும் நுண்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. குளோரினைப் பயன்படுத்தி தண்ணீரைச் சுத்தம் செய்யும் முறையை முதன் முதலில் 1902ம் ஆண்டில் செய்தது பெல்ஜிய நாடுதான். எனவே சுத்தத் தண்ணீரின் மகத்துவம் தெரிந்த நாம், அந்தத் தண்ணீரைப் பொறுப்புடன் பயன்படுத்துகிறோமா?.
தண்ணீர் கடவுளின் கொடை. இது இயற்கையின் கொடை. அது எந்தச் செல்வந்தராலும் உற்பத்தி செய்யப்படுவதல்ல. உற்பத்தி செய்யவும் முடியாது. தண்ணீர் பண்டமாற்றுப் பொருளுமல்ல. இது உலகத்தின் பொதுச் சொத்து. தற்போது வாழும் தலைமுறைக்கு மட்டுமல்ல, வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன்மீது உரிமை உண்டு. இறைவனே தனது படைப்புக்கள் அனைத்திற்குமென கொடுத்த கொடையை தங்களது சுய ஆதாயத்துக்காகத் தனியுடைமையாக்குவதும், அதனைக் காசுக்கு விற்கும் கடைச்சரக்காக, வியாபாரப் பொருளாக்குவதும் இறைவனுக்கும் அவரது படைப்புயிர்களுக்கும் விரோதமாகச் செய்யப்படும் கொடுஞ்செயல். இதனை ஒரு சமூக விரோதக் குற்றச்செயல் என்றுகூடச் சொல்லலாம். பணமுள்ளவர்க்குத்தான் பாட்டில் தண்ணீர் என்ற நிலையையும் காண முடிகின்றது. காசில்லாதவர் குழாய்த் தண்ணீருக்காகக் கால்கடுக்க நிற்க வேண்டியிருக்கிறது.
பசியாய் இருப்பவரின் அவலங்கள் உலகினரின் தண்ணீருக்கானத் தாகத்தை அதிகரித்துள்ளது. ஆதலால் நாமும் தண்ணீரின் அவசியத்தையும் மதிப்பையும் தேவையையும் உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவோம். நமது கடமைகளை நாம் ஒழுங்காகச் செய்யும் போது ஆன்ம சக்தியும் பெறுகிறோம்.









All the contents on this site are copyrighted ©.