2012-03-19 15:24:31

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இயங்குவதற்கு தமிழக அரசு உதவும்


மார்ச்,19,2012. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இயங்குவதற்கு தமிழக அரசு உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திங்களன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பின் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
கூடங்குளம் பிரச்சனை குறித்து ஆராய்வதற்கு, மத்திய, மாநில அரசுகள் அமைத்த வல்லுநர் குழுக்களின் அறிக்கைகள், அணுமின்நிலையத்தை எதிர்ப்பவர்களின் மனு இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்த பிறகு அணுமின் நிலையம் செயல்படவேண்டும், அது பாதுகாப்பானதே என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"கூடங்குளம் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கமோ, சுனாமியோ ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை" என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்ற சூழலில் மின் உற்பத்தியினை அங்கே துவங்கலாம் என அரசு முடிவு செய்திருக்கிறது எனவும் அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
அணுமின்நிலையத்தின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் அரசு இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, கூடங்குளம் பகுதிமக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, மின் நிலையக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.








All the contents on this site are copyrighted ©.