2012-03-19 15:23:53

கிழக்கு Timor நாட்டில் நடைபெற்ற அமைதியான தேர்தலுக்கு, திருஅவையும், ஐ.நா.வும் பாராட்டு


மார்ச்,19,2012. கிழக்கு Timor (Timor Leste) நாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம், மற்றும் மக்கள் வாக்களிப்பு அனைத்தும் எவ்வித வன்முறையும் இன்றி முடிவுற்றதற்காக அந்நாட்டின் ஆயர் ஒருவர் அனைவரையும் பாராட்டினார்.
கடந்த சனிக்கிழமையன்று கிழக்கு Timorல் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இஞ்ஞாயிறன்று வெளியானது. இம்முடிவின்படி, தற்போது அரசுத் தலைவராக இருக்கும் Jose Ramos-Horta தனது தோல்வியை ஒப்புக் கொண்டதால், தற்போது அதிக வாக்குகள் பெற்றுள்ள வேறு இரு வேட்பாளர்கள் மட்டும் வருகிற ஏப்ரல் மாதம் அரசுத் தலைவர் தேர்தலில் நேருக்கு நேர் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு முறையில் மக்கள் இந்த மாற்றங்களைக் கொணர்ந்தது குறித்து தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளார் Dili ஆயர் Alberto Ricardo da Silva.
மிகச் சிறுமையான, வறுமையான நாடு எனினும், கிழக்கு Timor (Timor Leste), குடியரசின் நல்ல அம்சங்களை உலகிற்கு பாடமாகத் தந்துள்ளது என்று ஆயர் Ricardo da Silva பெருமையுடன் சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையே, அந்நாட்டில் அமைதியான முறையில் தேர்தல்கள் நடைபெற்றதற்கு தன் பாராட்டுக்களைத் தெரிவித்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், இத்தேர்தல்களை எவ்வித வன்முறையும் இன்றி நடத்தித் தந்த அரசு அதிகாரிகளுக்கும், அங்கு பணி புரிந்து வரும் ஐ.நா.அமைதிப் படையினருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.