2012-03-19 15:23:33

எகிப்தில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் துணிவு கொண்டவர்கள் - காப்டிக் ரீதி கத்தோலிக்கத் தலைவர்


மார்ச்,19,2012. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், எகிப்தில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் துணிவு கொண்டவர்கள், அவர்கள் போராடவும் கடமைப்பட்டுள்ளனர் என்று எகிப்தில் உள்ள காப்டிக் ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் நிர்வாகப் பொறப்பைத் தற்காலிகமாக ஏற்றிருக்கும் ஆயர் Kyrillos William Samaan கூறினார்.
கெய்ரோவின் முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கடும் நோயுற்றிருப்பதால், திருஅவையின் தலைமைப் பொறுப்பைத் தற்போது ஏற்றிருக்கும் ஆயர் William, Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்புக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார்.
திருஅவையுடன் இணைந்து, எகிப்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்களும் தங்கள் கோவில்களைக் காக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள் என்று ஆயர் William கூறினார்.
இஸ்லாமிய அடிப்படைவாத வன்முறையாளர்களுக்குப் பயந்து அதிகமான கிறிஸ்தவர்கள் எகிப்தை விட்டு வெளியேறுவதாக அறிக்கைகள் வந்த வண்ணம் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் தங்கள் மத உரிமைகளுக்காகப் போராடி வருவதையும் தன்னால் காண முடிகிறதென்று ஆயர் William எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவர்கள் எகிப்து நாட்டில் அந்நியர்கள் அல்ல என்றும், தலைமுறை, தலைமுறையாக இங்கு வாழும் பல கிறிஸ்தவர்கள் இஸ்லாம் இந்நாட்டிற்குள் வருவதற்கு முன்பிருந்தே இங்கு வாழ்பவர்கள் என்றும் ஆயர் William தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.