2012-03-17 15:08:01

திருத்தந்தையின் திருப்பயணம், நம்பிக்கையின் பயணம் - திருப்பீடப் பேச்சாளர்


மார்ச்17,2012. மெக்சிகோ மற்றும் கியூபாவுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மேற்கொள்ளும் திருப்பயணம், அந்நாடுகளின் மக்களுக்கு நம்பிக்கையை வழங்கும் பயணமாக இருக்கின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
Octava Dies என்ற வத்திக்கான் தொலைக்காட்சி வார நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அருள்தந்தை லொம்பார்தி, இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கங்கள் பல தடவைகள் பேசப்பட்டிருந்தாலும், இப்பயணம் இந்நாடுகளுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாய் அமையும் என்று தெரிவித்தார்.
கடும் பிரச்சனைகளை எதிர்நோக்கி வரும் மெக்சிகோ நாட்டிற்கு இத்திருப்பயணம் இக்காலத்திலும் வருங்காலத்திலும் நம்பிக்கையை வழங்கும் என்றுரைத்த அவர், புதிய சகாப்தத்தின் பாதையில் நுழைந்து கொண்டிருக்கும் கியூப மக்களுக்கு இத்திருப்பயணம் மேலும் ஊக்கமூட்டுவதாய் இருக்கும் என்று கூறினார்.
இலத்தீன் அமெரிக்கா முழுவதும் புதிய நற்செய்திப்பணியில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில் திருத்தந்தையின் இத்திருப்பயணம், அக்கண்டத்தின் பணிகளுக்கும் தூண்டுகோலாய் அமையும் என்றும் திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.
மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருத்தந்தையின் திருப்பயணம் இம்மாதம் 23 முதல் 28 வரை இடம் பெறும்.







All the contents on this site are copyrighted ©.