2012-03-17 15:12:30

இலங்கையின் வடக்கில் இராணுவமயமாக்கல் வன்முறையை தூண்டலாம் - பன்னாட்டு மனித உரிமைகள் குழு எச்சரிக்கை


மார்ச்17,2012. இலங்கையின் வடபகுதியில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கலும், பொறுப்பான அரசு இல்லாமையும், அப்பகுதியில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதோடு, எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று ஒரு பன்னாட்டு மனித உரிமைகள் குழு எச்சரித்தது.
இலங்கையின் வடக்கில் மறுக்கப்படும் சிறுபான்மை உரிமைகள் குறித்தும், வடக்கில் இராணுவத்தின்கீழ் நடக்கும் மீள்குடியேற்றம் குறித்தும் இவ்வெள்ளியன்று அறிக்கை வெளியிட்ட Brussels ஐ மையமாகக் கொண்ட International Crisis Group என்ற பன்னாட்டு மனித உரிமைகள் குழு இவ்வாறு எச்சரித்துள்ளது.
இனமோதலின் மிக மோசமான விளைவுகளை எதிர்கொண்ட தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடபகுதி இலங்கை இராணுவத்தின் மறைமுக ஆட்சியின் கீழ் தொடர்ந்து இயங்குவதாக இவ்வறிக்கை தெரிவிக்கிறது.
கொழும்பில் இருக்கும் சிங்கள அதிகாரிகளே முக்கிய முடிவுகளை எடுப்பதாக கூறும் இவ்வமைப்பு, படிப்படியாக இலங்கையின் பெரும்பான்மைச் சிங்களவர்கள், அந்நாட்டின் வடபகுதியில் அரசின் உதவியுடன் குடியேற்றப்படுவதாகவும், இத்தகைய சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் வடபகுதி தமிழர்கள் மத்தியில் நிலவிய பழைய மனக்குறைகளை மீண்டும் தூண்டுவதாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை அரசே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ள இவ்வமைப்பு, இது தொடர்பில் இலங்கையில் செயற்படும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தொண்டு அமைப்புக்களும், இலங்கைக்கு நன்கொடை வழங்கும் நாடுகளும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.
தங்களின் சேவைகள் மற்றும் நிதிஉதவிகள் பாதிக்கப்பட்டவர்களின் விருப்பத்துக்கேற்ப அவர்களுக்கு நேரடியாகச் சென்று சேரும் வகையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது சர்வதேச சமூகத்தின் பொறுப்பு என்றும் அந்த மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.