2012-03-17 15:07:00

Al Jazeera என்ற அராபியத் தொலைக் காட்சிக்கு கர்தினால் Tauran பேட்டி


மார்ச்17,2012. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்களை இரண்டாந்தர குடிமக்களாக உணருகிறார்கள் என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் பெருமளவாக வெளியேறுதல், புனிதபூமியின் நிலைமை, ஐரோப்பாவில் முஸ்லீம்களுக்கு எதிரான பாகுபாடு, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான உறவு, அரபு நாடுகளின் அண்மை எழுச்சி, பல்சமய உரையாடல் எனப் பல தலைப்புக்களில் Al Jazeera என்ற அராபியத் தொலைக் காட்சிக்குப் பேட்டியளித்த கர்தினால் Tauran இவ்வாறு கூறினார். இந்தப் பேட்டியானது இச்சனிக்கிழமையிலிருந்து நாளொன்றுக்கு நான்கு தடவைகள் என மூன்று நாள்களுக்கு ஒளிபரப்பப்படும் எனக் கூறப்படுகிறது.
கலாச்சார மோதல்களைத் தவிர்ப்பதில் வெற்றி கண்டுள்ள நாம், அறியாமையின் மோதலைத் தவிர்ப்போம் என்று பேசிய கர்தினால் Tauran, ஐரோப்பாவில் முஸ்லீம் மதம் பற்றிக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது முக்கியம் என்றும், ஐரோப்பாவில் இசுலாம் குறித்த பயம் இருக்கின்றது, இதற்கு அறியாமையே காரணம் என்றும் குறிப்பிட்டார்.
“அறியாமை எனும் மோதலை தவிர்ப்பதற்காக”, மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு மதங்களின் கூறுகள் பற்றிக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் இப்பேட்டியில் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் Tauran.
கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் என்றே சொல்லப்படாமல், மதநம்பிக்கையற்றவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கும் பாடப்புத்தகங்களும் இருக்கின்றன, இது சரியல்ல என்றும் பேசியுள்ள கர்தினால், ஐரோப்பாவுக்கும், கிறிஸ்தவம் பற்றி மீண்டும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இப்பிரச்சனை, சமயக் கல்வியறிவற்றதன்மையின் வெளிப்பாடாகும், இக்கால இளையோர் தங்களது மதங்கள் குறித்து தெரிந்திருக்கவில்லை எனவும் கர்தினால் தவ்ரான் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.