2012-03-16 15:17:12

புனிதவெள்ளி சிலுவைப்பாதைச் சிந்தனைகளை முதன்முறையாகத் திருமணத் தம்பதியர் தயாரிக்கின்றனர்


மார்ச்16,2012. இவ்வாண்டு புனிதவெள்ளிக்கிழமையன்று உரோம் கொலோசேயத்தில் நடைபெறும் சிலுவைப்பாதை பக்திமுயற்சி தியானச் சிந்தனைகளைத் தயாரிப்பதற்கு திருமணமான ஒரு தம்பதியரிடம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுள்ளதாகத் திருப்பீடம் அறிவித்தது.
பன்னாட்டு Focolare பக்த இயக்கத்தில், “புதிய குடும்பங்கள்” என்ற அமைப்பை ஆரம்பித்துள்ள தம்பதியர் Danilo மற்றும் Annamaria Zanzucchiவை இவ்வாண்டு புனிதவெள்ளி சிலுவைப்பாதைத் தியானங்களைத் தயாரிக்குமாறு திருத்தந்தை கேட்டுள்ளார் எனவும் திருப்பீடம் அறிவித்தது.
புனிதவெள்ளி சிலுவைப்பாதை தியானச் சிந்தனைகளைத் தயாரிக்குமாறு திருமணமான தம்பதியரிடம் கேட்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்றும் கூறப்பட்டது.
வருகிற ஏப்ரல் 6ம் தேதி உரோம் கொலோசேயத்தில் திருத்தந்தையின் பங்கேற்புடன் நடைபெறும் இச்சிலுவைப்பாதை தியானங்கள், குடும்பத்தை மையப்படுத்தியதாக இருக்கும்.
புனிதவெள்ளி சிலுவைப்பாதைச் சிந்தனைகளைத் தயாரிப்பதற்கு மக்களைக் கேட்கும் பழக்கத்தை 1985ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் தொடங்கி வைத்தார்.
Focolare இயக்கத்தில் 1967ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “புதிய குடும்பங்கள்” என்ற அமைப்பில் தற்போது உலக அளவில் எட்டு இலட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
மேலும், சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் இறந்த 22 பெல்ஜிய நாட்டுப் பள்ளிச் சிறார் உட்பட 28 பேரின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 52 பேர் பயணம் செய்த இந்தப் பேருந்து விபத்தில் 24பேர் காயமடைந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.