2012-03-16 15:22:06

புகையிலை தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் முப்பது வயதுக்கு மேற்பட்ட ஐம்பது இலட்சம் பேர் இறக்கின்றனர் - ஐ.நா.


மார்ச்16,2012. உலகில் ஒவ்வோர் ஆண்டும் முப்பது வயதுக்கு மேற்பட்ட ஐம்பது இலட்சம் பேர் புகையிலை தொடர்புடைய நோய்களால் இறக்கின்றனர் என்று ஐ.நா.நலவாழ்வு நிறுவனம் இவ்வியாழனன்று வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகின்றது.
இவ்வறிக்கையின்படி, முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்புக்களில் 12 விழுக்காட்டு இறப்புக்களுக்குப் புகையிலைப் பயன்பாடே காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
புகைப்பிடிப்பவரின் புகையை சுவாசிப்பதால் மேலும் ஆறு இலட்சம் பேர் இறக்கின்றனர் என்றும், காசநோய், எய்டஸ், மலேரியா ஆகிய நோய்களால் இறப்பவர்களைவிட புகையிலை தொடர்பான நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் WHO நிறுவனம் கூறியது.
இதயநோயால் இடம் பெறும் 30க்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் மரணங்களில் 38 விழுக்காட்டுக்கும், நுரையீரல்புற்றுநோய் இறப்புகளில் 71 விழுக்காட்டுக்கும் புகையிலைப் பயன்பாடு காரணம் என அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
2005ம் ஆண்டில் அமலுக்கு வந்த அனைத்துலக புகையிலை ஒப்பந்தத்தின்படி, புகையிலை விளம்பரம், அதற்குப் பொறுப்பு ஏற்பவர்கள் மற்றும் அதனை ஊக்குவிப்பவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
புகையிலை தொடர்பான நோய்களால் 20ம் நூற்றாண்டில் சுமார் 10 கோடிப் பேர் இறந்தனர்.







All the contents on this site are copyrighted ©.