2012-03-16 15:18:10

திருத்தந்தையின் மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருப்பயணம்


மார்ச்16,2012. இம்மாதம் 23 முதல் 29 வரை மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மேற்கொள்ளும் திருப்பயணம் குறித்து நிருபர் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று விளக்கினார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி.
மெக்சிகோ சுதந்திரம் அடைந்ததன் 200வது ஆண்டு மற்றும் கியூபாவின் பாதுகாவலியான கோப்ரே பிறரன்பு மாதா திருவுருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு நிறைவு ஆகிய இவற்றைக் கொண்டாடுவது இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கங்கள் என்று விளக்கினார் அருள்தந்தை லொம்பார்தி.
திருத்தந்தை மேற்கொள்ளும் இந்த 23வது வெளிநாட்டுத் திருப்பயணம், அமெரிக்கா அனைத்திற்குமான ஒரு பயணமாக கருதப்படுவதால் இப்பயணத்தின்போது அமெரிக்காவின் ஏறக்குறைய அனைத்து ஆயர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கியூபாவின் முன்னாள் அரசுத்தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோ, திருத்தந்தையைச் சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்தால் திருத்தந்தையும் அவரை மனமுவந்து சந்திப்பார் எனவும் திருப்பீடப் பேச்சாளர் நிருபர்களிடம் கூறினார்.
இம்மாதம் 23 முதல் 26 வரை மெக்சிகோவிலும் பின்னர் 28ம் தேதி வரை கியூபாவிலும் திருப்பயணத் திட்டங்களை நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.