2012-03-16 15:20:16

சிரியாவில் கிறிஸ்தவர்கள் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள் – தமாஸ்கஸ் பேராயர் நாசர்


மார்ச்16,2012. சிரியாவில் அரசு ஆதரவாளர்களுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே மோதல்கள் கட்டுக்கடங்காமல் இடம் பெற்றுவரும்வேளை, கிறிஸ்தவர்கள் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று தமாஸ்கஸ் மாரனைட்ரீதி கத்தோலிக்கப் பேராயர் சமிர் நாசர் கூறினார்.
சிரியாவில் மக்கள் கொந்தளிப்பு தொடங்கி ஓராண்டு முடிந்துள்ளதையொட்டி ஃபீதெஸ் செய்தி நிறுவனத்துக்குச் செய்தி அனுப்பியுள்ள பேராயர் நாசர், 2011ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி சிரியாவின் தென் பகுதியில் ஒரு சிறிய போராட்டமாக தொடங்கிய இப்பிரச்சனை, இன்று அந்நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் வளர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இக்கடும் மோதல்களால் சிரியா எதிர்கொள்ளும் பொருளாதாரத்தடை, பணவீக்கம், உள்நாட்டுப்பணத்தின் மதிப்புக் குறைவு போன்றவை அந்நாட்டில் அழிவையும் வேலைவாய்ப்பின்மையையும் புலம் பெயர்வுகளையும் இறப்புக்களையும் அதிகரித்துள்ளன என்றும் பேராயரின் செய்தி கூறுகின்றது.
சிரியாவில் இப்போதைக்கு பிரச்சனை முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை எனக் குறிப்பி்ட்டுள்ள பேராயர் நாசர், தவக்காலத்தைத் தொடங்கியிருக்கும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின்மீது தங்கள் நம்பிக்கையை வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.