2012-03-15 15:35:45

மியான்மாரில் கத்தோலிக்க குருவும் புத்தத் துறவியும் இணைந்து துவக்கியுள்ள இலவச மருத்துவமனை


மார்ச்,15,2012. மியான்மாரில், ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் செய்யவேண்டும் என்று விழைந்த கத்தோலிக்க குரு ஒருவரது கனவு புத்தத் துறவிகளின் துணையுடன் அண்மையில் நனவானது.
மியான்மாரின் மண்டலே பகுதியில் தூய இருதயப் பேராலய பங்குத் தந்தையாகப் பணிபுரியும் John Aye Kyaw, தன் எண்ணத்தை பல்சமயக் கூட்டம் ஒன்றில் வெளியிட்டார். அக்கூட்டத்திற்கு வந்திருந்த புத்தத் துறவி Seinnita, அருள்தந்தை Aye Kyawவுக்கு உதவி செய்ய முன்வந்தார்.
புத்தத் துறவிகள் நடத்தி வந்த ஒரு சமுதாய மையத்தில் மருத்துவமனை அமைக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. அருள்தந்தை Aye Kyaw மருத்துவமனைக்காகச் சேகரித்து வைத்திருந்த தொகையைக் கொண்டு இந்த மருத்துவமனை கட்டப்பட்டு, அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் ஊதியம் ஏதும் பெறாமல் பணிபுரிய 15 மருத்துவர்கள் முன்வந்துள்ளனர் என்றும், 13 புத்தத் துறவிகள் மருத்துவமனையின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த மருத்துவமனை திறக்கப்பட்ட ஒரு சில நாட்களில் இங்கு 300க்கும் அதிகமான வறியோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.