2012-03-15 15:35:30

மதச் சுதந்திரத்திற்குப் பாதகமாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு அமெரிக்க ஆயர்கள் எதிர்ப்பு


மார்ச்,15,2012. மதச் சுதந்திரத்திற்குப் பாதகமாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு எடுத்துவரும் முயற்சிகளை எதிர்க்க அமெரிக்க ஆயர்கள் முழு வலிமையோடு போராடுவர் என்று ஆயர்களின் மேல்மட்டக் குழு கூறியுள்ளது.
அமெரிக்க ஐக்கிய அரசின் மனித வளம் மற்றும் நலத்துறை அண்மையில் சட்டமாக்கியுள்ள நலவாழ்வு காப்பீட்டு அம்சங்கள் கத்தோலிக்கர்களின் மனச்சான்றுக்கு எதிராக உள்ளது என்பதை வலியுறுத்தி வரும் அமெரிக்க ஆயர்கள், இப்புதனன்று வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், தங்கள் எதிர்ப்பை இன்னும் வலுவாகத் தெரிவித்துள்ளனர்.
ஆயர்களின் இந்த எதிர்ப்பு, கருத்தடை சாதனங்கள், மற்றும் கருகலைப்பு ஆகியவை குறித்த விவாதங்கள் அல்ல, மாறாக, மனசாட்சிக்கு எதிரான இந்த முறைகளை கத்தோலிக்க நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துவதையே தாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
மதங்களின் பண்பு, பணிகள் ஆகியவற்றை வரையறுப்பது அரசின் உரிமை கிடையாது என்பதைத் தெளிவுபடுத்தும் இந்த அறிக்கை, அரசின் இந்தப் போக்கு தொடர்ந்தால், மத உரிமைகளுக்குத் தகுந்த மரியாதை வழங்கும் அமெரிக்க நாட்டின் பெருமை சீர்குலையும் என்று வலியுறுத்துகிறது.








All the contents on this site are copyrighted ©.