2012-03-15 15:34:37

சிரியாவின் மக்களுக்கு எவ்வாறு உதவிகள் செய்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய தேவை ஒவ்வொரு நாளும் கூடி வருகிறது - திருப்பீடத் தூதர்


மார்ச்,15,2012. சிரியாவின் Baba Amr மாவட்டத்தில் செஞ்சிலுவை அமைப்பைச் சார்ந்தவர்கள் பணிகளை ஆரம்பித்தபின், அங்கிருந்து தொலைக்காட்சி மூலம் வெளியாகும் காட்சிகள் பொது மக்களைப் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன என்று சிரியாவில் பணிபுரியும் திருப்பீடத் தூதர் கூறினார்.
ஊடகங்களில் வெளியாகும் காட்சிகளில் காணப்படும் துன்பங்களுக்கு அரசும், புரட்சிக் குழுக்களும் காரணம் என்று ஒருவரை ஒருவர் குறைகூறி வரும் போக்கும் அதிகரித்து வருகிறது என்று திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari, MISNA செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பழிவாங்கும் உணர்வுகளில் புதைந்துள்ள இரு தரப்பினரும் தங்கள் உணர்வுகளிலிருந்து வெளியேறி, பன்னாட்டு நிறுவனங்களின் உதவியுடன் மக்களுக்கு எவ்வாறு உதவிகள் செய்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய தேவை ஒவ்வொரு நாளும் கூடி வருகிறது என்று பேராயர் Zenari எடுத்துரைத்தார்.
அரசுக்கும் போராட்டக் குழுக்களுக்கும் இடையே வலுப்பெற்றிருக்கும் மோதல்களால் அப்பாவி மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 18,000 முதல் 30,000 பேர் வரையிலான மக்கள் அண்மைய நாடுகளுக்கு அகதிகளாகத் தப்பித்துள்ளனர் என்றும் MISNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடு, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இத்தாலியும் சிரியாவில் உள்ள தூதரகத்தின் பணிகளை நிறுத்தி வைப்பதாக இப்புதனன்று அறிவித்துள்ளது.
சிரியா அரசு தன் மக்கள் மீது காட்டிவரும் கட்டுக்கடங்காத அடக்கு முறையை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சிரியாவில் அமைதி நிலைநாட்டப்படுவதற்கு அந்நாட்டு மக்களுக்குத் தங்கள் அரசு எல்லா வகையிலும் உதவ தயாராக இருப்பதாகவும் இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.