2012-03-15 15:33:15

கவிதைக் கனவுகள் ... நல்லாசிரியர் நற்பாடம் சொன்னார்


நற்பாடம் கற்பித்த நல்லாசிரியர் கேள்வி ஒன்று கேட்டார்
இலைகள் காற்றில் அசைகின்றன
செடிகள் காற்றில் அசைகின்றன
மலர்கள் காற்றில் அசைகின்றன – ஆனால்
மலைகள் காற்றில் அசைவதில்லையே, ஏன்?
மாணவன் சொன்னான்
பாறை அசையாது என்று.
நல்லாசிரியர் நல்லதொரு பாடம் சொன்னார்....
அசைவது பலவீனத்தின் வெளிப்பாடு
அசையாதது பலத்தின் வெளிப்பாடு என்று.

நற்பாடம் கற்பித்த நல்லாசிரியர் கேள்வி ஒன்று கேட்டார்
திருவுருவங்கள் அசைவதில்லை
திருவுருவங்கள் பேசுவதில்லை,
திருவுருவங்கள் மௌனமாகவே இருக்கின்றன, ஏன்?
மாணவன் சொன்னான்...
தரிசிக்கச் செல்லும் பக்தரிடமெல்லாம்
திருவுருவங்கள் பேசத் தொடங்கினால்
தரிசிக்கச் செல்வதையே நிறுத்துவார்கள் பக்தர்கள்.
நல்லாசிரியர் நல்லதொரு பாடம் சொன்னார்....
திருவுருவங்களின் மௌனம் பேச அழைக்கின்றது
பக்தனின் பாடல் படைத்தவனுக்கு இன்ப இசை
பக்தனின் புலம்பல் படைத்தவனுக்கு இரக்கம்
பக்தனின் பற்றுறுதியில் படைத்தவனுக்குப் பேரானந்தம் - எனவே பற்றுக பற்றற்றான் பற்றினை ....







All the contents on this site are copyrighted ©.