2012-03-14 15:26:13

புற்றுநோய்க்கான மிக விலை உயர்ந்த மருந்தை இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் தயாரிக்க அனுமதி


மார்ச்,14,2012. புற்றுநோய்க்கான மிக விலை உயர்ந்த மருந்து ஒன்றை இந்தியாவிலேயே தயாரித்து, குறைந்த விலையில் விற்பதற்கான அனுமதியை இந்திய அரசு இச்செவ்வாயன்று அளித்திருக்கிறது.
புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பதற்கான காப்புரிமை பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பேயர் (Bayer) நிறுவனத்திடம் இருக்கிறது. இனி, அந்த மருந்தின் பொதுமையான வடிவத்தை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு இந்தியாவில் இருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
தற்போது இந்த குறிப்பிட்ட மருந்தின் 120 மாத்திரைகளை இந்தியாவில் வாங்கவேண்டுமானால் சுமார் 2,84,000 ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் இந்த மருந்தை இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும்போது இதே அளவு மாத்திரைகள் வெறும் 9,000 ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும்.
இந்த பெருமளவிலான விலைக்குறைப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான இந்திய நோயாளிகளுக்குப் பேருதவியாக இருக்கும் என்று சமுதாய நலம் கொண்ட மருத்துவர்களும், நலவாழ்வுப் பணியாளர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.
அதேசமயம், இந்திய அரசின் இந்த முடிவு தமக்கு ஏமாற்றமளிப்பதாக இந்த மருந்துக்கான காப்புரிமை பெற்றிருக்கும் பேயர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி பேயர் நிறுவனம் ஆலோசித்துவருவதாக தெரிவித்திருக்கும் நிலையில், இந்த முடிவு நடைமுறைக்கு வருமா என்கிற சந்தேகமும் சிலரால் எழுப்பப்படுகிறது.
காப்புரிமை பிரச்சனைகள் இல்லாத பொதுமை மருந்துகளைத் தயாரித்து குறைவான விலைக்கு விற்கும் நாடுகளில் உலக அளவில் இந்தியா முன்னணியில் திகழ்ந்து வருகிறது.
எயிட்ஸ் மருந்துகள் உள்ளிட்ட பலவிதமான பொதுமை மருந்துகளை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியா, மருந்து காப்புரிமைகளை மதித்து நடக்கவேண்டும் என்று சர்வதேச மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன








All the contents on this site are copyrighted ©.