2012-03-13 15:05:59

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 109


RealAudioMP3 கடந்த ஆண்டு ஜுலை மாதம் தினமலர் நாளிதழில் ஒரு சோக நிகழ்வு வெளியாகியிருந்தது. குமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை என்ற ஊரில் ஒரு தாயும் மகனும் வசித்து வந்தார்கள். மகனுக்கு திருமண வயதானதும் திருமணம் நடந்தது. பெரும்பாலான குடும்பங்களில் நடப்பது போல் மாமியார், மருமகள் சண்டை அக்குடும்பத்திலும் இருந்தது. சில மாதங்களில் அவ்வீட்டிற்கு வந்த மருமகள் கருவுற்றார். மருமகள் கர்ப்பணியாக இருந்தபோது வந்த சண்டைகளில், மாமியார் மருமகளைப் பார்த்து, ‘உன் வயிற்றில் கரு தங்காது’ என சாபமிட்டிகிறார். பத்து மாதங்கள் கழித்து, பெண் குழந்தை பிறந்தது. திடீரென உடல் நிலை மோசமாகி சில மணி நேரங்களில் அக்குழந்தை உயிர் இழந்தது. இதைக் கண்டு வேதனையடைந்த மகன் “நீ கொடுத்த சாபத்தால்தான் குழந்தை இறந்து விட்டது” எனச் சொல்லி அந்த தாயை அடித்தே கொன்றுவிட்டார்.
இது போன்ற பல நிகழ்வுகளைக் கேட்டிருப்போம். அச்சமயத்தில், சாபம் என்பது என்ன? சாபம் பலிக்கிறதா? சாபம் பலிக்கிறதென்றால் யார் இடுகிற சாபம் பலிக்கிறது? எப்படிப்பட்ட சாபம் பலிக்கிறது? சாபம் விடலாமா? சாபம் விடக்கூடாது என்றால் சாபமிடுகிறவர்களை என்ன செய்வது? பிறர் சாபமிடும் சமயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? என எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம் விடைகள் என்ன? இன்றைய விவிலியத் தேடலில் இக்கேள்விகளுக்கெல்லாம் விடை தேட முயல்வோம்.

இன்று நாம் சிந்திப்பது திருப்பாடல் 109. இது குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மன்றாட்டு என்று சொல்லப்படுகிறது. இத்திருப்பாடலை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஆசிரியரைக் குற்றம் சாட்டிய எதிரிகளின் சாபங்கள் முதற்பகுதி முழுவதும் நிறைந்துள்ளது. எதிரிகளின் சாபங்களைக் கேட்ட ஆசிரியரின் உடல் மற்றும் மனம் அடைந்த வேதனையும், தம்மைச் சபிக்க வேண்டாம் மாறாக ஆசி வழங்க வேண்டும், ஏனெனில் நான் குற்றம் செய்யாதவன், எனவே என்னைச் சபித்தவர்களுக்கு நீரே கைம்மாறு அளிக்க வேண்டும் என இறைவனிடம் மன்றாடுவது இரண்டாம் பகுதி முழுவதும் அடங்கியுள்ளது. முதற்பகுதியில் இடம்பெறும் சாபங்களில் சில: சொற்றொடர்கள் 813.
அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்; அவனது பதவியை வேறோருவன் எடுத்துக் கொள்ளட்டும்!
அவனுடைய பிள்ளைகள் தந்தை இழந்தோர் ஆகட்டும்! அவனுடைய மனைவி கைம்பெண் ஆகட்டும்!
அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்! பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்!
அவனுக்கு உரியவற்றை எல்லாம் கடன் கொடுத்தவன் பறித்துக் கொள்ளட்டும்! அவனது உழைப்பின் பயனை அன்னியர் கொள்ளையடிக்கட்டும்!
அவனுக்கு இரக்கங்காட்ட ஒருவனும் இல்லாதிருக்கட்டும்! தந்தையை இழந்த, அவனுடைய பிள்ளைகள்மேல் யாரும் இரங்காதிருக்கட்டும்!
அவன் வழி மரபு அடியோடு அழியட்டும்! அடுத்த தலைமுறைக்கு அவர்களுடைய பெயர் இல்லாது போகட்டும்!

அன்பார்ந்தவர்களே! கேட்கவே கொடூரமாக உள்ளதல்லவா? மனிதர்களின் அழிவை இந்த அளவுக்கு யாராலும் சிந்தித்துப் பார்க்க முடியுமா? இவை தனி ஒரு மனிதரை மட்டுமல்ல அவருடைய தாய், மனைவி, பிள்ளைகள் என ஒட்டு மொத்த சந்ததியும் அழியும்படி விடப்பட்ட சாபங்கள். இவையெல்லாம் ஒருவருக்கு நிகழ்ந்தால் எவ்வாறு இருக்கும் என கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. ஏனெனில் அவ்வளவு கொடூரமாக உள்ளது. இவை 2000 ஆண்டுகளுக்கு முன் யாரோ யாருக்கோ விடுத்த சாபங்கள். இன்று கேட்கும் நமக்கு மிகவும் கொடூரமாகத் தெரிகிறது. ஆனால் இன்று நம்மோடு வாழும் அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, அப்பா, அம்மா, பிள்ளை என்று பாராமல் எத்தனை சாபங்களிடுகிறோம்? ‘நீ போற இடத்துல நல்லா இருக்கமாட்ட’, ‘போய்ட்டு 3 நாள்ல திரும்பி வந்து விடுவ’, ‘நீ நல்லாவே இருக்க மாட்ட’, ‘நடுத்தெருவுக்கு வந்துடுவ’... இது போன்று எத்தனை எத்தனை சாபங்கள்? இவை எவ்வளவு கொடுமையானவை என என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? இவையெல்லாம் நமது சமூகங்களில் அல்லது குடும்பங்களில் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற சாபங்கள். இவை அப்படியே நடக்கவேண்டும் என்று நினைத்துச் சொல்கிறோமோ? அல்லது கோபத்தில் சொல்கிறோமோ? எப்படிச் சொன்னாலும் இச்சாபங்கள் கொடூரமானவைதான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

அன்பார்ந்தவர்களே! சாபம் என்பது என்ன? ஒருவரின் எதிர்காலம், ‘மனிதர்கள் விரும்பாத, ஏளனமான அல்லது இழிவான நிலைக்குத் தள்ளப்படும்’ என்று சொல்வது, முன்மொழிவது என்று சொல்லலாம். அடுத்ததாக, ஏன் சாபமிடுகிறோம்? எப்போது சாபமிடுகிறோம்?
பெரும்பாலும் நீதி மறுக்கப்படும் போதும், ஏமாற்றப்படும் போதும், அநியாயமான முறையில் உடைமைகள் பறிக்கப்படும்போதும், எதிர்பார்ப்பு நிராகரிக்கப்படும்போதும் அதை தடுத்து நிறுத்த முடியாத பட்சத்தில், வருத்தத்தை அல்லது இழப்பை அல்லது எதிப்பை வெளிக்காட்ட சாபங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி விடப்படுகின்ற சாபங்கள் பலிக்கின்றனவா? இச்சாபங்களின் விளைவுகள்தான் என்ன?
ஒரு கத்தோலிக்க ஆலயத்தை வழிநடத்தி வந்த, ஒரு குற்றமும் செய்யாத குரு ஒருவரைக் குற்றம் சுமத்தி துன்புறுத்தினார்கள். எனவே அவர் மன வேதனையடைந்து கறுப்பு அங்கி அணிந்து சாபம் விட்டார். எனவே அந்த ஊர் அதன்பிறகு விளங்கவேயில்லை என்று ஒரு ஊரை பற்றி என் சிறுவயதிலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘வஞ்சகமாக ஏமாற்றினார்கள். எனவே அவர்கள் குடும்பமே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது’, ‘ஊரை ஏமாற்றிச் சம்பாதித்தான். எனவே இன்று முகவரி இல்லாமல் போய்விட்டான்’ என பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். நாமும் சொல்லியிருப்போம்.
நல்ல மனிதர்கள் மனவேதனையில் சொல்கின்ற வார்த்தைகள் அப்படியே பலிக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. அதே சமயத்தில், உலகில் வேதனைப்படும் கோடிக்கணக்கானோர் வேதனையில் விடும் சாபங்கள் எல்லாம் பலிக்கின்றனவா? என்பதும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். சாபங்களைக் கேட்பவரின் மனது எல்லையில்லா வேதனைக்குள்ளாகிறது. இதைத்தான் திருப்பாடல் 109 இரண்டாம் பகுதி நமக்குச் சொல்கிறது.
சொற்றொடர்கள் 5 மற்றும் 2224.
நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமையே செய்தனர்; அன்புக்குப் பதிலாக அவர்கள் வெறுப்பையே காட்டினர்;
நானோ எளியவன்; வறியவன்; என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.
மாலைநேர நிழலைப்போல் நான் மறைந்து போகின்றேன்; வெட்டுக் கிளியைப் போல நான் காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றேன்.
நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன; என் உடல் வலிமை இழந்து மெலிந்து போகின்றது.

சாபம் எந்த அளவு மனிதர்களின் உடல் மற்றும் மனநிலையைப் பாதிக்கிறது என்பதை இதைவிட விளக்கமாகச் சொல்லத் தேவையில்லை எனக் கருதுகிறேன். சாபங்கள் பலிக்கின்றன என்பதை விட, ‘விடப்பட்ட சாபங்கள் பலித்து விடுமோ’, ‘நமது வாழ்க்கை அவர்கள் சபித்தது போலாகி விடுமோ’ என்ற பயம் மனிதர்களின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கிறது. ஆண்களை விட பெண்களே சாபங்களைக் கண்டு பயப்படுகிறார்கள் என உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனக்குத் தெரிந்த ஒர் அருள் சகோதரி அவருடைய அம்மாவிற்கு மிகவும் பயப்படுவார். அவர்கள் சொல்வதற்கு மறுபேச்சு பேசமாட்டார். ஆனால் அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்பவில்லை என்றும் சொல்வார். ‘உங்களுக்கு விரும்பமில்லாத காரியங்களைப் பற்றி பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாமே’ என்று சொன்னபோது, “அவ்வாறு நான் மாற்றுக்கருத்துச் சொல்லும்போது பொறுமையாகக் கேட்டுக்கொள்வார்கள். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அதை மனதில் வைத்துக் கொண்டு வாய்ப்புக் கிடைக்கும் சமயத்தில் பல்வேறு சாபங்களைக் கொடுப்பார்கள். வயதில் பெரியவர்கள், பேரன் பேத்திகளைப் பார்த்தவர்கள் அவர்கள் கொடுக்கிற சாபம் பலித்துவிட்டால் என்ன செய்வது? அவர்கள் சாபம் நமக்கு எதற்கு?” என்று சொல்லியிருக்கிறார். இவ்வாறு பிறருடைய சாபங்களுக்குப் பயந்து மனதிற்குள்ளேயே புழுங்குவோர் ஒரு புறமிருக்க, சாபத்திற்கு, பதில் சாபமிடுவோர் மறுபுறம் இருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டு இன்று நாம் சிந்திக்கும் திருப்பாடலிலேயே உள்ளது.
சொற்றொடர் 29
என்னைக் குற்றஞ்சாட்டுவோர்க்கு மானக்கேடு மேலாடை ஆகட்டும்! அவர்களின் வெட்கம் அவர்களுக்கு மேலங்கி ஆகட்டும்!

இச்சொற்றொடர் சாதாரண மனித மனநிலைக்குச் சரியான எடுத்துக்காட்டு. ‘பல்லுக்குப் பல்’, ‘கண்ணுக்குக் கண்’ என்பதைப்போல சாபத்திற்கு, சாபம் பதில் என்பதைப்போல இயல்பாக வருகின்ற ஒன்று. ஆனால் இயேசுவின் நற்செய்திகளைக் கேட்டு படித்து வாழப் பழகிய பண்படுத்தப்பட்டக் கத்தோலிக்கரின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என பின்வரும் சொற்றொடர்கள் நமக்குச் சொல்கின்றன.
உரோமையருக்கு எழுதிய திருமுகம் 12:14
உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம்.

லூக்கா நற்செய்தி 6:28
உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று ஆண்டவர் இயேசுவின் வாழ்வு அமைந்துள்ளது. இயேசுவைக் குற்றவாளியாக்கி சாட்டையால் அடித்து, சிலுவை சுமக்க வைத்து, இறுதியிலே அச்சிலுவையிலேயே அறைந்தார்கள். கண்டிப்பாக சாதாரண மனிதர்கள் யாரும் தங்களை இவ்வளவு தூரம் வதைத்தவர்களைச் சபிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் இயேசு அவர்களைச் சபிக்கவில்லை. மாறாக தந்தையே இவர்களை மன்னியும், ஏனெனில் இவர்கள் செய்வதை இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் என்றார்.
எனவே அன்பார்ந்தவர்களே! பிறரை வேதனைக்குள்ளாக்கும் சாப வார்த்தைகளை நாம் பயன்படுத்துகிறோமா எனச் சிந்திப்போம். இனி யாரையும் சபிக்கப்போவதில்லை என முடிவெடுப்போம். ஆசி வழங்குவோம். ஆசிபெறுவோம்.








All the contents on this site are copyrighted ©.