2012-03-13 15:27:37

பழையக் காயங்களை அகற்ற மதக்கல்வி உதவும் என்கிறார் இலங்கை கர்தினால்


மார்ச்,13,2012. மதக்கல்வியின்றி, ஒரு சமூகத்தைத் தூய்மைப்படுத்துவதோ பல தேசிய இன மக்களிடையே ஒன்றிப்பை உருவாக்குவதோ கடினமான ஒன்று என்றார் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்.
மதக்கல்வியின் மூலமே குழந்தைகள் நன்முறையில் கல்வி கற்க முடியும் என்ற கொழும்பு பேராயர் கர்தினால் இரஞ்சித், ஒரு குழந்தையின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கான கல்வியை மத நிறுவனங்கள் மட்டுமே வழங்க முடியும் என்றார்.
இதனை மனதிற்கொண்டு இலங்கை அரசு, மதக்கல்வியை வழங்க உதவும் பள்ளிகளை மேலும் திறக்க மத நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதக்கல்வியின் வழியாக ஒரு நாட்டின் ஆன்மா வளப்படுத்தப்படும் என்பதால், அதன் துணை கொண்டு, இலங்கையின் பழையக் காயங்களை அகற்ற முடியும் என மேலும் கூறினார் கர்தினால் இரஞ்சித்.
மதத்தையும் கல்வியையும் ஒருங்கிணைக்கும் மதக்கல்வி, சமூகங்களும் தேசிய இனங்களும் ஒன்றிணைந்து வர உதவுகிறது என மேலும் கூறினார் கர்தினால்.








All the contents on this site are copyrighted ©.