2012-03-13 15:34:26

சிறு கிறிஸ்தவக் குழுமங்கள், கத்தோலிக்கத் திருஅவையின் இன்றியமையாத ஓர் அங்கம் - இந்திய ஆயர்


மார்ச்,13,2012. SCC (Small Christian Communities) என்று அழைக்கப்படும் சிறு கிறிஸ்தவக் குழுமங்கள், அல்லது அடிப்படைக் கிறிஸ்தவக் குழுமங்கள் என்ற அமைப்பு, கத்தோலிக்கத் திருஅவை மேய்ப்புப் பணியின் இன்றியமையாத ஓர் அங்கம் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
மார்ச் 9ம் தேதி முதல் இத்திங்கள் வரை மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களின் சிறு கிறிஸ்தவக் குழுமங்கள் இணைந்து நடத்திய ஒரு கருத்தரங்கின்போது இலக்னோ ஆயர் Gerald Mathias இவ்வாறு கூறினார்.
12 ஆயர்களும், சிறு கிறிஸ்தவக் குழுமங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்தக் கருத்தரங்கில், ‘திருஅவையின் புதியதொரு முகம்’ என்று அழைக்கப்படும் இவ்வமைப்பை இன்னும் ஆர்வத்துடன் வளர்க்கும் வழிகள் கலந்தாலோசிக்கப்பட்டன.
40 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் துவக்கப்பட்ட சிறு கிறிஸ்தவர்கள் குழுமம் என்ற முயற்சிக்கு 2000மாம் ஆண்டு இந்திய கத்தோலிக்க ஆயர்கள் முழு ஆதரவை அளித்தனர் என்று கூறிய ஆயர் Mathias இந்த முயற்சியின் மூலம் கத்தோலிக்கர்கள் இறைவார்த்தையில் இன்னும் ஆழமான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள இக்குழுமங்கள் பெரிதும் உதவுகின்றன என்று எடுத்துரைத்தார்.
இந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்களில் 60,000க்கும் மேற்பட்ட சிறு கிறிஸ்தவக் குழுமங்கள் அமைந்துள்ளன என்றும், இவற்றில், 2000க்கும் அதிகமான குழுமங்கள் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும், 1300க்கும் அதிகமான குழுமங்கள் மேற்கு வங்கத்திலும் அமைந்துள்ளன என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.