குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்
மார்ச்,13,2012. தமிழக நகரங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,
அவர்கள் கிராமப்புற குழந்தைகளைவிட மோசமான நிலையில் உள்ளதாக, ஐ.நா.,வின் அங்கமான, "யூனிசெப்'பின்
ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக குழந்தை நல நிறுவனமான யுனிசெப் சார்பில்,
சென்னையில் வெளியிடப்பட்ட உலக குழந்தைகளின் நிலை குறித்த அறிக்கையின்படி, தமிழகத்தில்,
48 விழுக்காடு குழந்தைகள் நகரங்களில் வாழ்கின்றனர் எனவும், கிராமப்புறத்தில் வாழும் குழந்தைகளைவிட,
நகர குழந்தைகளின் நிலை வறுமை காரணமாக மோசமாக உள்ளது எனவும் தெரிய வருகிறது. ஆறு வயது
வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, நகரங்களில் 8 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், கிராமப்புறங்களில்,
13 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், பள்ளிகள், மருத்துவமனை, நீர் நிலைகள் ஆகியவற்றுக்கு
அருகில், குடிசைப்பகுதி குழந்தைகள் வாழ்ந்தாலும், வறுமை மற்றும் பாகுபாடான தன்மையால்,
அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காமல் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர் எனவும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.
2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி, இந்தியாவில், குடிசைகள் எண்ணிக்கையில், நான்காம்
இடம் வகிக்கும் சென்னை சென்னையில் நான்கில் ஒரு பங்கினர், அதாவது 12 இலட்சம் பேர் குடிசைப்
பகுதிகளில் வாழ்கின்றனர். மேலும், கிராமத்துத் தாய்களைவிட, நகரத்துப் பெண்கள், தங்கள்
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் பின்தங்கியுள்ளனர் எனவும், தாய்ப்பால் கொடுப்பதன்
மூலம், குழந்தைகளின் இறப்பு விகிதம், 20 விழுக்காடு வரை குறைய வாய்ப்புள்ளது எனவும் இவ்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.