2012-03-12 15:16:38

வாரம் ஓர் அலசல் – மனிதத்தை மாசுபடுத்தும் வன்மம்


மார்ச்.12,2012. RealAudioMP3 ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாநிலத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டு படைவீரர் ஒருவர் இஞ்ஞாயிறு அதிகாலை மூன்று மணிக்குத் தனது இராணுவ முகாமுக்கு அருகிலிருந்த கிராமத்தில் வீடுவீடாகச் சென்று சுட்டதில் குறைந்தது 15 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 9 பேர் குழந்தைகள். இத்துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் இறந்துள்ளனர். இந்தப் படைவீரர், அந்த வன்முறையில் ஈடுபடுவதற்கு முன்னதாக மனோ ரீதியாக உடைந்து போயிருந்ததாகக் கூறப்படுகின்றது.
ஈராக்கில், உப இராணுவத்தினர் கடந்த மாதத்தில் ஏறக்குறைய 58 இளையோரை அடித்து அல்லது சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த இளையோர் 'emos' அதாவது சாத்தானை வழிபடுபவர்கள் எனச் சொல்லி இந்த இராணுவத்தினர், இப்பாதகச் செயலைச் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள். மேற்கத்திய உலகில் rock இசை கேட்பவர்கள் மற்றும் வித்தியாசமான ஆடை அணியும் இளையோர் "emos" என விவரிக்கப்படுகின்றனர்.
இலங்கையில், தலைநகர் கொழும்புவின் புறநகரான கொலன்னாவையில் இச்சனிக்கிழமை மாலை வெள்ளை வாகனம் ஒன்றில் சென்ற இராணுவத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. வெள்ளை வாகனத்தில் வந்து தன்னைக் கடத்த முயன்றவர்களை அப்பகுதி மக்கள் தாக்கியதாக கொலன்னாவை நகராட்சித் தலைவர் இரவீந்திர உதயஷாந்த ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். ஆயினும், ஆட்கடத்தல் குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய பகுதியிலுள்ள Jos என்ற ஊரின் புனித Finbar கத்தோலிக்க ஆலயத்தில் காலை பத்து மணிக்கு ஞாயிறு திருப்பலி நடந்து கொண்டிருந்த போது தற்கொலை குண்டு வெடிப்புத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். முஸ்லீம்களை அதிகமாகக் கொண்ட வட நைஜீரியாவையும் கிறிஸ்தவர்களை அதிகமாகக் கொண்ட தெற்கு நைஜீரியாவையும் பிரிக்கும் இந்த Jos நகரில் கடந்த பல ஆண்டுகளாக மோதல்கள் இடம் பெற்று வருகின்றன. 2010ம் ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இந்தியாவின் காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் சென்ற வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியானதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இராணுவ வாகனம் தீவைத்து கொளுத்தப்பட்டது. மேலும், இந்தியாவில் நகர்ப்புறங்களில் 10 பெண்களுக்கு 9 பேர் வீதம், பல்வேறு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டு உலகப் பெண்கள் தினத்தையொட்டி, பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று, சென்னை உள்ளிட்ட நகரங்களில் 15 வயது முதல் 50 வயதுள்ள 5,000 க்கும் மேற்பட்ட நகர்ப்புற பெண்களிடம் ஆய்வு நடத்தியதில் இது தெரியவந்துள்ளது.
சிரியாவில் தொடர்ந்து நடை பெற்று வரும் அரசுக்கு எதிரானப் போராட்டங்களின் பாதிப்புக்களால் சுமார் 15 இலட்சம் பேருக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. அந்நாட்டில் அமைதி ஏற்படுவதற்கு, ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஆயினும் சிரியாவில் இடம் பெறும் வன்முறையால் Homs நகரிலும், அதன் புறநகர்ப்பகுதியான Baba Amr லும் ஏற்பட்டுள்ள அழிவுகள், தனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்ததாக ஐ.நா.மனிதாபிமான விவகாரங்கள் துறைத் தலைவர் Valerie Amos கூறியதை விவரிக்கிறார் ஐ.நா.பணியாளர் Charles Appel.
RealAudioMP3 அன்பு நேயர்களே, இஞ்ஞாயிறன்று ஊடகங்களில் வெளியான இந்தச் செய்திகள் போன்றவை, ஒவ்வொரு நாளும் தவறாமல் தினத்தாள்களில் இடம் பெற்றுத்தான் வருகின்றன. ‘‘அடாதது செஞ்சா படாதது படணும்’’ என்ற ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒருவருக்குத் தீங்கிழைத்தால் அதனால் மிகுந்த துன்பத்தை அடைய நேரிடும். அதிலும் ஒருவரது மனம் வேதனையுறும்படி வஞ்சனை புரிந்தால் வஞ்சனையில் ஈடுபடுவோர் விவரிக்க இயலாதத் துயரத்திற்கு உள்ளாவர். மகாபாரதத்தில்கூட, பெரியோர்கள் துரியோதனனுக்கு எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டுப் பாண்டவர்களுக்கு அவர் பல துரோகங்களைச் செய்தார். முடிவில் பல துன்பங்களை அடைந்து, குலத்துடன் அழிந்தார் என வாசிக்கிறோம். பிறருக்கு ஒருபோதும் கொடுமை செய்யக் கூடாது என்பதற்கு வரலாற்றிலும், அன்றாட வாழ்க்கையிலும் பல நிகழ்ச்சிகள் நடந்து வந்தாலும் மனிதரின் இரத்தவெறி மட்டும் அடங்கியதாகத் தெரியவில்லை.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் திருத்தந்தை 16ம் பெனடிக்டும், “வன்முறை, எதிர்க் கிறிஸ்துவின் கருவி. இது கடவுளாட்சிக்குப் புறம்பானது. வன்முறை ஒருபோதும் மனித சமுதாயத்துக்குப் பணி செய்யாது. ஆனால் மனித சமுதாயத்தைத் தரம் தாழ்த்தும், அதன் மதிப்பை இழக்கச் செய்யும்” என்று கூறினார். RealAudioMP3
மனிதரின் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையில் மனிதரையும் மனிதத்தையும் இழந்த ஒருவர், இணையத்தில் தனது உணர்வுகளை இப்படிக் கொட்டித் தீர்த்திருக்கிறார். இரத்தம் உறைந்த சாலையில் பிணங்களின் மீது நடப்பதாகவே ஓர் உணர்வு. மனித எச்சங்கள் எல்லாம் வளமாகிப் போனதால், பிணவாடை பூக்களைக்கூட நெருங்கவிடவில்லை. நாட்டின் மலர்களை கல்லறைகளுக்கு வைத்தே தீர்ந்து விட்டதால், கடைகளில் பிளாஸ்டிக் பூக்கள்தான் விற்கப்படுகின்றன. துப்பாக்கி தோட்டாக்களில் கணிதம் படிக்கும் சிறார் நாளை என்னவாக மாறுவார்கள்? நாட்கள் கசந்து போகின்றன. இந்த வன்முறை வாழ்க்கை என்று தீரும்? இந்த வன்முறை வாழ்க்கை என்று தீரும்?. இதுதான் நம் ஒவ்வொருவரின் கேள்வியும்.
உலகில் சில இடங்களில் இடம் பெறும் வன்முறைகளைப் பார்க்கும் போது, மக்கள் அடிபட்டுச் சாவதற்கென்றே இம்மண்ணில் உயிரோடு இருப்பது போலத் தெரிகின்றது. வகுப்பறையில் வன்முறை, கல்லூரியில் வன்முறை, அரசியலில் வன்முறை, குடும்பத்தில் வன்முறை, மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் வன்முறை. எனவே இக்காலத்தில் பாதுகாப்பான இடம் எது என்று தேடவேண்டியிருக்கின்றது. திருத்தந்தை கூறியது போல, வன்முறை மனித சமுதாயத்தின் மாண்பை மரணிக்கச் செய்கின்றது. சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களைச் சமாதானம் செய்ய வந்தவரையே சரமாரிக் குத்திய நிகழ்வு ஒன்றை இஞ்ஞாயிறு தினத்தாளில் வாசித்தோம். தமிழகத்தின் பள்ளிபாளையத்துக்கு அருகேயுள்ள வெங்கடேசபுரத்தில் குடும்பத் தகராறின் போது சமாதானம் பேசிய மாமியார் மீது அவரது மருமகனே சரமாரியாக தாக்குதல் நடத்தினார் எனச் செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.
அதேசமயம், ஒரு கோவில் யானையின் பரிவைக் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்த செய்தியும் இஞ்ஞாயிறு தினத்தாளில்தான் இடம் பெற்றிருந்தது. கேரளாவின் குருவாயூரில் சுவாமியை யானை மீது அமர்த்தி, கோவில் பிரகாரம் சுற்றி வரும்போது, தவறி கீழே விழுந்த 12 வயதுச் சிறுவனை, காலால் மிதிக்காமல், மிகவும் கவனமாக அங்கேயே கனிவுடன் நின்ற யானையின் செயலைக் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர் என்றும், இந்த யானை தான், இம்மாதம் 5ம் தேதி நடந்த யானை ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசை வென்றது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
விலங்குகளுக்கு இருக்கும் கனிவும் பாசமும், கத்தியைக் கையில் எடுக்கும் மனிதரின் புத்தியில் அற்றுப் போவது ஏன்? தோழர்களே, வன்முறை முதலில் கத்தியில் கருவுறுவதில்லை. அது முதலில் மனிதரின் மனத்தில் உருவாகிறது. தத்துவமேதை ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மகாத்மா காந்திஜியின் மரணத்தைப் பற்றிச் சொல்கின்ற போது, “இந்த வன்முறை தனிப்பட்ட உணர்வின் ஒட்டுமொத்த வெளிப்பாடு” என்று குறிப்பிட்டார். நாம் ஒவ்வொருவருமே, கோபமாக, பொறாமையாக, காழ்ப்புணர்ச்சியாக, பழிவாங்கும் உணர்வாக, பகையாக, நமது வன்ம உணர்வுகளை மனதில் தேக்கி வைத்திருக்கிறோம். அவை முதலில், பொருள்களைத் தரதரவென இழுப்பது, சுவரில் எச்சில் துப்புவது, புத்தகங்களின் பக்கங்களை வேகமாகத் திருப்புவது எனச் சிறிய சிறிய செயல்கள் மூலமாகக்கூட வெளிப்படலாம். பின்னர் அவை ஒருநாள் பீறிட்டு வெடித்துச் சிதறலாம். இதனால் ஒருவரில் வெளிப்படும் வன்மம், பலரின் வன்மமாக மாற வாய்ப்பு உள்ளது. சாதிச் சண்டைகளை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
திபெத்தியர்களிடம் ஒரு பழக்கம் உள்ளதாம். அவர்கள் முந்திய நாள் தூக்கத்தில் யாரையாவது துன்புறுத்துவது போல கனவு கண்டால், கனவில் வந்த அந்த மனிதரை அடுத்த நாள் சந்தித்து, நேற்று என் கனவில் நான் உங்களிடம் கோபப்பட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி அவருக்குப் பழங்களைக் கொடுத்து சமாதானம் சொல்லித் திரும்புவார்களாம். இயேசுவும் மலைப்பொழிவில் சொன்னார் : “நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்” (மத்.5,23-24) என்று. இப்படிச் செய்வது நமது ஆற்றாமைக்குச் சவாலாக இருக்கலாம். ஆனால், இவ்வாறு செய்தால் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எரிந்து கொண்டிருந்து இருக்கும் வன்ம உணர்வுகள், ஆதவனைக் கண்ட பனிபோல் கரைந்து போகும். எல்லார் மனத்திலும் அன்பும் கருணையும் பாசமும் ஊற்றெடுக்கும். ஆதலால் மனித நேயத்தைப் படிப்படியாகப் பறித்து சிதைத்து வரும் வன்முறையின் அனைத்து வடிவங்களையும் மறுப்போம்! அன்புநெறி வளர்ப்போம்! மனிதத்துவத்தைத் தூக்கி நிறுத்துவோம். வன்முறையைத் தனிப்பட்ட வாழ்விலிருந்தும், பொது வாழ்விலிருந்தும் அகற்றுவது நமது தார்மீகக் கடமை எனக் கொள்வோம்.








All the contents on this site are copyrighted ©.