2012-03-12 15:00:31

வவுனியாவில் மாதாவின் திருஉருவச்சிலை அகற்றப்பட்டமைக்கு, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் கண்டனம்


மார்ச்,12,2012. வவுனியா இளமருதங்குளம் கார்மேல் மாதா தேவாலயத்தில் உள்ள, மடு மாதாவின் திருஉருவச்சிலை சனியன்று அதிகாலை அகற்றப்பட்டமை, இன நல்லுறவை சீர் குலைக்கும் செயல் எனவும், இது குறித்த செயற்பாட்டை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கார்மேல் மாதா தேவாலயத்தினுள் புகுந்தவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த மடுமாதாவினுடைய திருஉருவச்சிலையை எடுத்து, ஆலயத்தின் மத்திய பகுதியில் நிலத்தில் வைத்து திருஉருவச்சிலை மீது நீரை ஊற்றியுள்ளனர். மேலும், கார்மேல் மாதாவின் திருஉருவச்சிலை வைக்கப்பட்டிருந்த கூட்டினை உடைத்து மாதாவின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த மாலைகளை கழற்றி வீசி எறிந்துள்ளனர்.
இச்சம்பவம் மிகவும் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது என்றும், இன, மத வேறுபாடு எவையும் இன்றி அனைவரும் வழிபடும் அன்னை மடுமாதா திருஉருவச்சிலைக்கு அவமரியாதைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்.
நாட்டின் பல பாகங்களிலும் வீதிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்ற நிலையில், ஆலையத்தினுள் உள்ள மடுமாதா திருஉருவச்சிலைக்கு இப்படி ஒரு பாதுகாப்பற்ற நிலமை ஏற்பட்டுள்ளது, அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்பட்டுத்தியுள்ளது எனக் கூறும் எம்.பி. செல்வம் அடைக்கலநாதனின் அறிக்கை, பாதுகாப்புத் தரப்பினர் இச்சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை மேற்கொண்டு, சம்பவத்தில் தொடர்புடையவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.