2012-03-12 14:59:51

திருத்தந்தை - கடவுள் வழங்கும் அருளுக்கு ஏற்றவாறு முழுமனதோடும், முழு வலிமையோடும் வாழ்வதே நம் வாழ்வின் மறைபொருள்


மார்ச்,12, 2012. கடவுளின் அருளை நம் வாழ்வில் வரவேற்று, அவ்வருளுக்கு ஏற்றவாறு முழுமனதோடும் முழு வலிமையோடும் வாழ்வதே நம் வாழ்வின் மறைபொருள். உண்மையான மகிழ்வு, மற்றும் ஆழ்ந்த அமைதியை வாழ்வில் பெற இதுவே அடித்தளம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இச்சனிக்கிழமை மாலை உரோம் நகரில் உள்ள Celio குன்றில் அமைந்துள்ள புனித கிரகோரி ஆலயத்தில் Canterbury பேராயர் Rowan Williams அவர்களுடன் மாலை செப வழிபாட்டை திருத்தந்தை நடத்தியபோது இவ்வாறு கூறினார்.
Celio குன்றில் அமைந்துள்ள Camaldoli மௌனத் துறவு குழுமத்தின் 1000மாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, திருத்தந்தையும், பேராயர் Williamsம் கலந்து கொண்ட இந்த மாலைச் செப வழிபாட்டில், கிறிஸ்தவ மறையில் உள்ள பல்வேறு சபைகளின் ஒருங்கிணைப்பை அருளாளர் இரண்டாம் ஜான்பால் மிக ஆர்வமாக வரவேற்றார் என்பதைச் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, இதே பாதையில் கிறிஸ்தவர்கள் செல்வது கடவுளின் அரசை வளர்க்கும் ஒரு வழி என்று எடுத்துரைத்தார்.
கத்தோலிக்க திருஅவை மற்றும் ஆங்கலிக்கன் சபையைச் சேர்ந்த அனைத்து மக்களும் கிறிஸ்தவ சபைகளின் ஒற்றுமைக்கென செபிக்கவும், உழைக்கவும் இன்னும் தீவிரமாக தங்களையே அர்ப்பணிக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார் திருத்தந்தை.
திருத்தந்தையின் மறையுரையைத் தொடர்ந்து, தன் மறையுரையை வழங்கிய பேராயர் வில்லியம்ஸ், வர்த்தகங்களின் அவசரத் தேவைகளால் நிறைந்துவரும் உலகில் வாழும் அனைவரும், நமது சுயநலம், பேராசை இவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு, கிறிஸ்துவைப் போல, பிறர்பணிக்கு நம்மையே வழங்க முன்வரவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
திருத்தந்தையும் பேராயர் வில்லியம்ஸ் அவர்களும் இக்கோவிலை விட்டு வெளியேறும் முன், திருத்தந்தை புனித கிரகோரி வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு எளிய அறையில் மெழுகு திரிகளை ஏற்றிவைத்து சிறிது நேரம் செபித்தனர்.








All the contents on this site are copyrighted ©.