2012-03-10 14:03:58

ஓரினச்சேர்க்கையாளரை அங்கீகரிப்பது, திருமணத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும் - திருப்பீட அதிகாரி


மார்ச் 10,2012. ஒரே பாலினச்சேர்க்கை மனிதர்க்கெதிரான வன்முறையையும் பாகுபாட்டையும் கத்தோலிக்கத் திருஅவை கண்டிக்கிறது, அதேநேரம், ஒரே பாலினத்தவர் சேர்ந்து வாழ்வதைத் திருமணம் போன்று அங்கீகரிப்பது, ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழும் திருமணப்பந்தத்தைக் குறைத்து மதிப்பிடுகின்றது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் எடுத்துரைத்தார்.
“பாலியல் அடிப்படையில் மனிதர்க்கெதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகள்” குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அவையில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி, மனிதர்க்கெதிராக நடத்தப்படும் வன்முறை மற்றும் பாகுபாட்டைக் கண்டித்துப் பேசினார்.
மேலும், “போதுமான குடியிருப்பு வசதிகள்” குறித்தும் ஐ.நா.கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் தொமாசி, போதுமான குடியிருப்பு வசதிகளைக் கொண்டிருப்பது அனைவருக்கும் அடிப்படை உரிமை என்று பேசியதோடு, குழந்தைகளை வளர்ப்பதற்குப் பொறுப்பான பெண்களுக்கு குடியிருப்பு வசதிகள் முக்கியமானவை என்று கூறினார்.
இவ்வெள்ளியன்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களைச் சந்தித்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்டும், ஓரே பாலினத் திருமணத்திற்கெதிராகக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.