2012-03-09 16:03:41

பாலியல் குறித்த கிறிஸ்தவப் புரிந்துணர்வு வலியுறுத்தப்பட வேண்டும் - திருத்தந்தை


மார்ச்09,2012. கன்னிமை எனும் பண்பைப் போற்றிப் பேணும் மனப்பாங்கு முழு கிறிஸ்தவ சமுதாயத்திலும் ஏற்படுவதற்கு மேய்ப்புப்பணி சார்ந்த நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பாலியல் குறித்த கிறிஸ்தவப் புரிந்துணர்வு வலியுறுத்தப்பட வேண்டுமெனவும் கூறிய திருத்தந்தை, தங்களது திருமண வாழ்வுக்கு விசுவாசமாக இருக்கும் தம்பதியரின் சான்று பகரும் வாழ்வு இளையோருக்குத் தேவைப்படுகின்றது என்றும் கூறினார்.
அட் லிமினா சந்திப்பையொட்டி அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களில் ஒரு குழுவினரை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தற்போதைய சமுதாயம் எதிர்நோக்கும் திருமணம் மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து இக்குழுவினரிடம் பேச விரும்புவதாகத் தெரிவித்தார்.
திருமணம் மற்றும் குடும்பத்தின் உண்மையான இயல்பு தவறாக விளக்கம் அளிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, திருஅவைப் போதனைகளில் கிறிஸ்தவத் திருமணம் குறித்துச் சொல்லப்பட்டு இருப்பவைகள், திருமணத் தயாரிப்புக்கான மறைக்கல்வியில் வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஒவ்வொரு சமுதாயத்தின் மாபெரும் வளமாகவும் எதிர்காலமாகவும் இருக்கும் சிறார் மீது உண்மையான அக்கறை எடுக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, இளையோருக்குக் கல்வி வழங்குவதிலும், உறுதியான குடும்ப வாழ்வை அமைப்பதிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருஅவை ஆற்றி வரும் தனது பணியைத் தொடர்ந்து செய்யுமாறும் ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை.
195 உயர்மறைமாவட்டங்கள் மற்றும் மறைமாவட்டங்களையும், ஓர் அப்போஸ்தலிக்க நிர்வாக அமைப்பையும் கொண்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருஅவையின் தலைவர்களை, அட் லிமினா சந்திப்பையொட்டி குழுக்களாகச் சந்தித்து வரும் திருத்தந்தை, இவ்வெள்ளிக்கிழமையன்று இக்குழுக்களில் எட்டாவது குழுவைச் சந்தித்து உரையாற்றினார்.







All the contents on this site are copyrighted ©.