2012-03-09 16:04:51

ஒப்புரவு அருட்சாதனத்திற்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது - திருத்தந்தை


மார்ச்09,2012. Apostolic Penitentiary எனப்படும் பாவமன்னிப்புச் சலுகை வழங்கும் திருப்பீடத்தின் உச்ச நீதிமன்றம் நடத்தும் கருத்தரங்கில் பங்கு கொள்ளும் சுமார் 1300 பேரை, இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஒப்புரவு அருட்சாதனம் குறித்துப் பேசினார்.
ஒப்புரவு அருட்சாதனக் கொண்டாட்டத்திற்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து விளக்கிய திருத்தந்தை, அருட்சாதனங்களும் நற்செய்தி அறிவிப்பும் வெவ்வேறானவை என ஒருபோதும் நோக்கப்படக் கூடாது என்று கூறினார்.
திருஅவை உறுப்பினரின் தூய வாழ்விலிருந்து புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு உந்துதல் கிடைப்பதால், ஒப்புரவு திருவருட்சாதனம், புதிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு வழியாக அமைகின்றது என்றும் விளக்கிய திருத்தந்தை, தூய வாழ்வுக்கும், ஒப்புரவு அருட்சாதனத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது என்றும் கூறினார்.
கடவுள் நம்மை தம்மோடு ஒப்புரவாக்கிய கிறிஸ்துவின் முகத்தைப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி மூலம் இக்காலத்தவருக்கு அறியச் செய்வதற்கு நாம் அழைப்புப் பெற்றுள்ளோம் என்று கூறிய திருத்தந்தை, இக் கிறிஸ்துவின் முகத்தை ஒப்புரவு அருட்சாதனம் வழியாக நாம் மீண்டும் கண்டுணர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஒப்புரவு அருட்சாதனத்தை நிறைவேற்றும் அருட்பணியாளர்களின் வாழ்வுக்கு கிறிஸ்துவே எப்பொழுதும் மையமாக இருக்க வேண்டுமெனவும் திருத்தந்தை கூறினார்.







All the contents on this site are copyrighted ©.