2012-03-08 15:32:27

வட இலங்கையில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு


மார்ச்,08,2012. இலங்கையின் வடக்கே போருக்குப் பின்னர் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகவும், குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பவங்களும் கூடியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
நடப்பாண்டில் இதுநாள் வரையிலும் சிறுமிகள் மீது 24 பாலியல் வன்முறைச் சம்பவங்களும் பெண்கள் மீது 32 சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக யாழ் போதனா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி சின்னையா சிவரூபன் கூறியுள்ளார்.
2010ம் ஆண்டு 102 ஆக இருந்த இவ்வெண்ணிக்கை, கடந்த ஆண்டு 182 ஆக அதிகரித்திருக்கின்றது.
பாலியல் வன்புணர்வின் பின்னர் சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக டாக்டர் சிவரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களிடையே குறைந்துவரும் விழிப்புணர்வு, அரசு நிர்வாகத்தில் காணப்படுகின்ற அக்கறையின்மை, மற்றும் வளப் பற்றாக்குறைகள் என்பன இத்தகைய வன்முறைப் போக்கிற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. அத்துடன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் குற்றவாளிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு காரணமாகும் என டாக்டர் சிவரூபன் குறிப்பிடுகின்றார்.
குற்றம் புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதில் நீண்டகாலம் எடுப்பதுவும் இத்தகைய குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.