2012-03-08 15:30:41

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் மீது இந்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க தமிழ்நாடு ஆயர்களும், டில்லி பேராயரும் கோரிக்கை


மார்ச்,08,2012. தூத்துக்குடி மறைமாவட்டம் மற்றும் பிற அரசுசாரா அமைப்புக்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருக்கும் இந்திய அரசு இந்தத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று டில்லி பேராயர் Vincent Concessao கூறினார்.
அரசின் இந்தத் தடையை அகற்றுமாறு தமிழ்நாடு ஆயர்கள் ஏற்கனவே இந்திய அரசை கேட்டுள்ளனர். பேராயர் Concessao தமிழ்நாடு ஆயர்களின் கோரிக்கையை முற்றிலும் ஆதரித்து தன் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அரசு விதித்திருக்கும் இந்தத் தடையினால் தூத்துக்குடி மறைமாவட்டமும் அரசுசாரா அமைப்புக்களும் ஏழைகள் மத்தியில் மேற்கொண்டுள்ள பல துயர்துடைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது நீதிக்குப் புறம்பானது என்று பேராயர் Concessao கூறினார்.
தூத்துக்குடி மறைமாவட்டம் பிற நாடுகளில் இருந்து சமூகச் சேவைக்கென பெற்றுள்ள நிதியை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக எழுந்துள்ள போராட்டங்களை ஆதரிப்பதற்குச் செலவு செய்துள்ளது என்ற காரணம் காட்டி இந்திய அரசு மறைமாவட்டத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கிவைத்துள்ளது.
கத்தோலிக்க திருஅவை நிறுவனங்கள் ஏழைகளின் துயர்துடைக்கும் பணிகளில் நாடெங்கும் ஈடுபட்டிருப்பதுபோல், தூத்துக்குடி மறைமாவட்டத்தின் சமுதாயப் பணிக்குழுவும் ஈடுபட்டுள்ளது என்று கூறிய டில்லி பேராயர், பிறநாடுகளிலிருந்து பெற்றுள்ள நிதி உதவிகளை இந்த மறைமாவட்டம் எந்த வழியிலும் மாற்றிச் செலவிடவில்லை என்பது தனக்குத் தெரியும் என்று வலியுறுத்திக் கூறினார்.
டில்லிப் பேராயர் Vincent Concessao, பிரதமர் மன்மோகன் சிங்க் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரிடம் தன் கோரிக்கையை விடுத்துள்ளதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.