2012-03-08 15:32:11

ஆண்களுக்கு நிகராக இரயில் ஓட்டுவதில் மகிழ்ச்சி: இரயில் இன்ஜின் முதல் பெண் ஓட்டுனர் பெருமிதம்


மார்ச்,08,2012. "எல்லா ஆண்களும் பெண்களை அடக்கி ஆள்வதில்லை. ஆண்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் பெண்கள் வெற்றி பெற முடியும்,'' என, திருச்சி கோட்ட இரயில்வேயின் முதல் இரயில் இன்ஜின் பெண் ஓட்டுனர் கூறினார்.
"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?' என்று பெண்ணியத்தை அடக்கி ஆளும் ஆண்களுக்கு நிகராக, பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளனர். ஆண்கள் மட்டுமே பணிபுரிய முடியும் என்ற கடினமான துறைகளிலும், பெண்கள் இன்று காலடி பதித்துள்ளனர்.
குறிப்பாக ஆட்டோ, பேருந்து, வாடகைக் கார், ஆகியவற்றை ஓட்டுகின்றனர். விமான ஓட்டுனராகவும், கப்பல் கேப்டனாகவும், இரயில் இன்ஜின் ஓட்டுனராகவும் உள்ளனர்.
அந்தவகையில், திருச்சி கோட்ட இரயில்வேயில் முதல் பெண் இரயில் இன்ஜின் ஓட்டுனராக சேர்ந்து, பணியாற்றி வரும் நாராயண வடிவு உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தை பற்றி கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் ராமச்சந்திரா நகர் தான் என் சொந்த ஊர். டிப்ளமோ படித்துவிட்டு, திருமணத்துக்கு பிறகு தேர்வெழுதி, கடந்த 2006ம் ஆண்டு இப்பணியில் சேர்ந்தேன். முதலில் அனைவரும், "உனக்கு எதுக்கு இந்த வேலை' என்று அலட்சியப்படுத்தினர். என் கணவர் தான் என்னை மிகவும் ஊக்குவித்தார்.
ஆண்களுக்கு நிகராக இரயில் ஓட்டுகிறோம் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா ஆண்களும் பெண்களை அடக்கி ஆள்வதில்லை. என் கணவரின் ஆதரவும், ஊக்குவிப்பும், அன்பும் இல்லையென்றால், நான் இந்தப் பணிக்கு வந்திருக்க முடியாது. பெண்கள் முன்னேற என் கணவர் போன்ற ஆண்களின் துணையும் இருப்பதால் தான், என்னை போன்ற பெண்கள் வெற்றி பெற முடிகிறது. இவ்வாறு கூறினார் முதல் இரயில் இன்ஜின் பெண் ஓட்டுனரான நாராயண வடிவு.








All the contents on this site are copyrighted ©.