2012-03-07 15:29:07

மார்ச் 07, 2012. – கவிதைக் கனவுகள்.............நம் நியாயமே நம் வாழ்க்கையாகிறது


பசுவுக்குப் பால் கறக்க வழக்கம்போல் வந்தார் கோனார்.
'கன்றுக்கானதைக் களவாடுவது குற்றமில்லையா?'
வழக்கமில்லாத கேள்வி அன்று என்னிடமிருந்து.
'தம்பி! அனைத்தையும் குடிக்கவிட்டால்
கன்று மூச்சுத் திணறிச் செத்துவிடும்'
இது கோனார் விளக்கவுரை.
கோனாரின் நியாயம்
வனவிலங்குகளுக்கு விதிவிலக்கானது.

'கூண்டுகளில் மிருகங்களை அடைத்து வைப்பது
தப்பில்லையா?'
மிருகக்காட்சிச்சாலையில் அம்மாவிடம் கேட்டேன்.
'புத்தகத்தில் படிப்பதை நேரில் பார்க்க
குழந்தைகளுக்கு இது வாய்ப்பில்லையா?'
அன்னையின் நியாயம்
குழந்தைகளை மட்டுமே சுற்றியிருந்தது.
காட்டுமிருகங்கள் மனிதனைப் பார்க்க விரும்பினால்
மனிதனைக் கூண்டில் அடைத்து எடுத்துச் செல்வோமா?
கேட்க நினைத்தது தொண்டையில் சிக்கியது.
மனிதர்களையே பார்க்காமல் மரிக்கும்
விலங்குகளை நினைக்க பாவமாக இருந்தது.

குரங்கெனும் விலங்கிலிருந்து மனிதன் பிறந்தானாம்.
நம்புவது சிரமமாக உள்ளது.
சுவரில் எறிந்த பந்து திரும்பி வரலாம்.
ஆனால், குரங்கிலிருந்து வந்தவன்
அதை நோக்கியே வளர்ந்து கொண்டிருக்கிறானே!
மனிதன் நிலை கண்டு பயமாக இருக்கிறது.








All the contents on this site are copyrighted ©.